கிராமிய அபிவிருத்தி தொடர்பாக‌ இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் (Letter to Hon.President about adoption of villages)













05/06/2015

மேன்மைதகு ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோக்ஷலிசக் குடியரசு
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு 01
விடயம்: கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களைத் தத்தெடுப்பது தொடர்பாக‌
மேன்மைதகு ஜனாதிபதி அவர்களுக்கு தீவிரவாத, இனவாத மற்றும் குடும்ப ஆட்சி முடிவுற்று மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் ஜனநாயக, நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது,. இந்த ஆட்சி மாற்றத்திற்கான எமது முயற்சி தோல்வியடையவில்லை என்ற சந்தோசம் என‌க்கு எப்போதுமே இருக்கின்றது.
நல்ல தேக ஆரோக்கியத்துடன் தொடர்ந்தும் நல்லாட்சி புரிவதற்கு கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு என் மடலைத் தொடர்கின்றேன்.
எனக்கு இப்போது 30 வயது தாண்டிவிட்டது. நான் மன்னார் மரிச்சிக்கட்டி கிராமத்தை விட்டு அகதியாய் வெளியேறும் போது வயது 5, 1990ம் ஆண்டு பாடசாலையில் இடமில்லாமல் மரத்தடி நிழலில் அமர்ந்து படித்த அனுபவத்துடன் மரிச்சிக்கட்டி கிராமத்தைவிட்டு அகதியாய் வெளியேறினோம். 25 வருடங்கள் கடந்து எங்கள் சந்ததியினர் இன்று அதே போன்று ஒரு மர நிழலில் படித்துக்கொண்டிருப்பதை பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றேன்.
1990களில் எமது தாய் மண்ணைவிட்டு வெளியேறிய போது எந்த நிலையில் எமது கிராமத்தை விட்டுவந்தோமோ அதே அவலநிலையைத்தான் இன்றும் பார்க்க முடிகிறது. இலங்கையில் பல நூறு கிராமங்கள் கவனிப்பாரற்று, அடிப்படை வசதி வாய்ப்புகளற்று அநாதரவாய்க் கிடக்கின்றன. ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் எல்லாம் வளர்ச்சியடைந்த, வளமுள்ள நகரங்களையே அபிவிருத்திசெய்தன; அதற்காக பல நிதி உதவிகளையும் செய்திருக்கின்றன.
ஆனால், இலங்கை திருநாட்டின் பெயரை உலகிற்கு எடுத்துச் சொன்ன, பல துறைகளிலும் நற்பெயர் ஈட்டித்தந்த பலர் குக்கிராமக்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிகொணர்ந்தவர்களே.
சுசந்திகா ஜயசிங்ஹ (Susanthika Jayasinghe (Sinhala: සුසන්තිකා ජයසිංහ) என்ற விளையாட்டு வீராங்கனை (Atnawala ,Warakapola, Keகல்ல‌,) அதனவள என்று குக்கிராமத்திலிருந்து வந்தவர். இவர் ஓய்வுபெற்ற பின் இவருக்கு ஈடாக இன்றுவரை இன்னும் யாரும் விளையாட்டுத்துறைக்கு வரவில்லை. இன்றைய திகதியில் நாட்டை ஆட்சி செய்யும் நம் கெளரவ ஜனாதிபதி ஒரு கிராமத்திலிருந்து வந்த விவசாயின் மகன். இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அவற்றைக் கூறிப் பக்கங்களை நீட்ட விரும்பவில்லை
100 நாள் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பின்தங்கியுள்ள 100 குக்கிராமங்களைத் தேர்வுசெய்து தத்தெடுப்பதற்கான ஒழுங்குகளைச் செய்யும்படி தயவாய் வேண்டிக்கொள்கின்றேன்.
இக்கிராமங்களைத் தத்தெடுக்கும் பணியில் அதன் கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் அரசியல் என்று அனைத்துத் துறைகளையும் அபிவிருத்திசெய்யும் வகையிலான செயற்திட்டமொன்றைச் செயற்படுத்துவதற்குத் தனிக் குழு ஒன்றை அமைக்கும் படியும் தயவாய் வேன்டுகிறேன்.
எப்படியான திட்டங்களை செயலுருப்படுத்துவது என்பது தொடர்பான போதிய ஆலோசனைகள் தேவைப்படும்போது அவற்றை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக இத்தால் உறுதியளிக்கின்றேன்.

நன்றி.
இவண்,
இஸ்ஸதீன் றிழ்வான்,
ஆசிரியர் "என் மகன் ஒரு லீடர்"





எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: