என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 21


வாழ்கின்ற போது கடந்துசெல்கின்ற நிமிடங்கள் கவலையையும் சந்தோஷத்தையும் மாற்றி மாற்றி ஓட விடுகின்றது.

இந்த கவலையும் சந்தோஷமும் ஒரு அணுவில் இருக்கும் பிலஸ் மைனஸ் போன்றது மட்டுமே.

இரவானது, பகல் இல்லாது ஒரு நாளை சரி செய்வதில்லை.
பகலானது, தனது சூரியனை ஓய்வுக்காக அனுப்பிவிட்டு சந்திரனை வரச்சொல்லி ஆளனுப்பி தன்னை இருளால் போர்த்திக்கொண்டு அதன் முழு தினத்தை பூர்த்தி செய்துகொள்கின்றது.

கடலில் முத்துக்குளிக்கச் செல்கின்றவன் கடல் நீரில் குளிர்ச்சியை தன் உடலால் உணர வேண்டும்.

அந்த நீள் கடலில் உவர்ப்பு நீரை தன் நாவால் ருசிக்க வேண்டும். மனிதனின் உணர்வு அவனது நல்லது கெட்டது எது என்பதை தீர்மானிக்க உதவியாக அமைகிறது.

பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் வழமை போல் பாடசாலையை நோக்கி புத்தகங்களை சுமக்கத்துவங்கிவிட்டோம்.

அது பாடசாலை ஆரம்பமாகி மூன்றாவது நாள் கழிந்திருக்கும். என்னுடைய மாமா எனது தந்தையை பார்க்க வந்திருந்தார்.
நீண்ட நேரம் பேச்சில் மூழ்கி இருந்தார்கள்.

அவர்கள் இருவரின் பேச்சில் எனக்கு பிடித்துப்போன சிலதும் தேவையான சிலதும் கிடைத்தது.

தன் மகன் இரண்டு வார விடுமுறை போதாது என்று இன்னும் பாடசாலைக்குப் போகாமல் இருக்கின்றான் என்று குறைசொல்லி என் தந்தையிடம் ஆலோசனையும் ஆறுதலும் பெற வேண்டி வந்தது போல் அவருடைய வார்த்தைகளின்  ஆதங்கத்தைப்புரிந்து கொண்டேன்.

எனது மாமாவுக்கு தகுந்த சில ஆலோசனைகளை தந்தை வழங்கினார்.

பட்டத்தை பறக்க விடுங்கள், ஆனால் அதன் நூலை தன் கையை விட்டு நலுக விட்டுவிடாதீர்கள். நூல் நலுகினால் பட்டம் முகவரியற்றுப்போய்விடும்.

பிள்ளைகளை வாழ விடுங்கள், ஆனால் பட்டங்களை போல்…….

பிள்ளைகளை நம் மேற்பார்வையில் வைத்துக்கொண்டு என்று என் தந்தை சொல்லிக்கொண்டு போனார்………

அவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டுங்கள்.

நம் பிள்ளைகளின் உள்ளத்தில் அமைதியையும் சாந்தியையும் விதைத்துவிட வேண்டும்.

நல்ல உணவும் நல்ல உடையும் மட்டும் உள அமைதியை கொடுத்துவிடாது.

அவர்களின் உள அமைதியையும் சந்தோசத்தையும் கடைகளில் கூட வாங்கிக் கொடுக்க முடியாது.

சாந்தி விற்பனைக்கு இல்லை.
பசியை உணர்வது போல்,
கோபத்தை உணர்வது போல்,
தூக்கத்தை உணர்வது போல்,
உள்ளம் அமைதி பெறுவதையும் சமாதனம் மனதில் உதயமாகுவதையும் உணர வேண்டும்.
அதனை அவர்கள் உணர்வதை, அவர்களுக்கு உணர்த்துவதை கற்றுக்கொடுப்பது சிறுவர் உளவியலின் முக்கிய தத்துவமாகும்.

உள்ளம் சாந்தி அடையும் போது நம் பிள்ளைகளின் ஆடல் அசைவுள், உள, உடல் வளர்ச்சி வேகப்படுத்தப்படுகிறது.

மூக்குக் கயிறு அருந்து போன மாடுகளின் வேகத்தை விஞ்சிய பிள்ளைகளிடத்தில் திடீர் மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் பார்க்க முடியும்.

அதனை எதிர்பார்க்கும் பெற்றோர்கள் திட்டமிட்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

தந்தையின் தொடர் வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்த மாமாவின் முகத்தில் நல்ல புன் சிரிப்பை பார்த்தேன்.
அது என் உள்ளத்தை குளிர்ச்சிப்படுத்தியது.

பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையில் இந்தாங்க……. என்று தேநீரை நீட்டினேன் நான்….வா தம்பி என்று என்னை அமர வைத்து அன்பாய் சில வார்த்தைகள்.

திட்டமிட்டுக் கட்டப்பட்ட வீடுகளின் அழகையும் திட்டமிட்டு வளர்த்த பிள்ளைகளின் அன்பையும் பெறுவது பெற்றார்களின் கடமையாகும்.

முற்றும்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

Anonymous said...

Super Appu,
Kalakkittinga.
Ella appanum padikkavendiya ontru.

thanks
Kasim MOhamed Gani

Anonymous said...

Assalaamu alikum.
Jazakallah for your thoughts.

N Mohammed