நேரம் for கருத்துப் பரிமாற்றம், கருத்து - 02

(பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு)

“நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள் தேவை யின்புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.

முஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள் தொடர்பாக அனைவரதும் கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் அதன் மூலம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் சாத்தியமான மாற்றங்களையும் உண்டுபண்ணுவதற்கான ஒரு விஷேட திட்டமே இது.

இந்த கருத்துப் பரிமாற்ற பகுதியில் வெளியிடப்படும் தலைப்பைக் கவனத்தில் கொண்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள்தவிர்க்க வேண்டியவைபின்பற்ற வேண்டியவை குறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டலில் பதியவும்.
கொடுக்கப்பட்ட உங்கள் கருத்தைக் கொண்டு முழுமையான கட்டுரையாக வடிவமைக்கப்பட்டு மாத முடிவில் உங்கள் பார்வைக்கு வழங்கப்படும்.

இன்ஷா அல்லாஹ்மாதா மாதம் புதிய புதிய தலைப்புக்களில் கருத்துச் சேகரிப்பு நடைபெரும்.

சமூகத்தின் தேவை கருதி தயவு செய்து உங்கள்  ஆலோசனைகளை இங்கு பதியும் படி தயவாய் வேண்டிக் கொள்கிறோம்.




தலைப்பு:
பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
                                                                                                                              

கருத்துப் பரிமாற்றம்:

நமது பெண்கள் வெளிநாடுகளில் உடல் உள பிரச்சினைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு மானத்தையும் உயிரையும் இழக்கும் சந்தர்ப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்

1.  பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தொடர்வது அவசியமா?

2. வெளிநாட்டு வேலைவாய்ப்பு கூடாது என்று தடுத்தால் அவர்களின் வாழ்வியல் வருமானத்திற்கு என்ன செய்வது என்ற கேள்வி நியாயமானதா?

3. அதற்கு நடைமுறை ரீதியாக எந்த வகையான ஆலோசனைகளை வழங்கலாம்?

4. இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் சமூக சேவை நிருவனங்கள் நமது பெண்கள் குறித்து சிந்திக்கின்றனவா? அவர்களின் வாழ்வியல் வருமானம் குறித்த ஏதாவது உதவிகள் செய்யப்படுகின்றனவா?

5. எமது ஆண்கள் இது குறித்து கவனம் செலுத்துகின்றார்களா?

6. அல்லது பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குறித்து வேறு என்ன மிக முக்கியமாக சொல்ல நினைக்கிறீர்கள்?


தொடருங்கள், தொடரும் எம் முயற்சியுடன் இணைந்துகொண்டு……



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

10 comments:

Anonymous said...

Lareena AH said......

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ


நல்லதொரு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் என்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

(இக்கருத்துக்கள் யாவும் முடிந்த முடிபுகள் அல்ல. மாறாக, இப்பிரச்சினை குறித்து இன, மத, மொழி முதலான எல்லைகளுக்கப்பால் நின்று ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், திரட்டப்பட்ட தகவல்கள், பத்திரிகை வாயிலாகப் பெறப்பட்ட தகவல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையே என்பதைத் தயவுசெய்து கருத்திற்கொள்ளவும்)


நம்முடைய குத்பா மேடைகள் அமல்களின் சிறப்புக்களைப் பற்றி முழக்கமிடுகின்றன. இயக்கங்களைப் பற்றிய காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஆனால், நம்முடைய சமூகத்தில் புரையோடிப் போயுள்ள கலாசார - சமூக சீரழிவுகள், பொருளாதார அசமத்துவம், அதனடியாகத் தோன்றியுள்ள எதிர்மறை விளைவுகள், அவற்றையெல்லாம் நிவர்த்திப்பதற்குரிய அழகான வழிகாட்டலைக் கொண்டுள்ள இஸ்லாத்தின் நடைமுறைச் செயற்திறன் என்பன பற்றியெல்லாம் எந்தளவுதூரம் சிந்திக்கின்றன, சிந்திக்கத் தூண்டுகின்றன, பேசுகின்றன, வழிகாட்டுகின்றன என்பதெல்லாம் வெறும் கேள்விக்குறிகள் மட்டுமே. அத்தகையதொரு சமகாலப் பிரச்சினைதான் பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் அதன் எதிர்மறை விளைவுகளும் எனலாம். அது குறித்து நாம் பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முயல்வது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன்:


பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?


1. குடும்பத்தின் வறுமை நிலையும், குடும்பப் பொருளாதாரத் தேவையை நிவர்த்திப்பதைப் பொறுப்பேற்க ஆண்கள் இல்லாத நிலைமை.யும். (கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்களும் தந்தையை இழந்த பெண்களும் இதில் பெரிதும் உள்ளடங்குகின்றனர்)

2. சமூகத்தில் தலைவிரித்தாடும் சீதனப் பிரச்சினை. சீதனமாகக் கேட்கப்படும் வீடு, நகை, ரொக்கம் என்பவற்றைத் தனக்காக, தன் சகோதரிக்காக அல்லது மகளுக்காகச் சேகரித்துக்கொள்ளும் நோக்கில் வெளிநாடு செல்லுதல்.

3. கணவனுக்கு நல்லதொரு தொழில் இல்லாத நிலையில் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்யவென்று கணவன்மாராலேயே வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுதல்.

4. பிறர் வெளிநாடு சென்று வருவதைப் பார்த்து ஆடம்பர மோகத்தில் வெளிநாடு செல்லுதல்.

5. நாட்டில் கடுகதி வேகத்தில் அதிகரித்துச் செல்லும் விலைவாசியை ஈடுகட்டி அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற ஒரு சாதாரண சம்பளமெடுக்கும் தொழில் போதுமானதாக இராது என்ற அவநம்பிக்கை உணர்வு.

6. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் கவர்ச்சிகரமான சலுகைகள், விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு வெளிநாடு செல்லுதல்.


இப்படி பல காரணங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துவதை அறியலாம்.

Anonymous said...

Lareena AH said.....

பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்வதன் எதிர்விளைவுகள் யாவை?

1. குடும்பத்தினரை நீண்ட நாட்கள் பிரிந்திருக்க நேர்தல். இதனால் உடல் மற்றும் உளரீதியான தாக்கங்களை எதிர்கொள்ள நேர்தல்.

2. பணியிடத்தில் பல்வேறு உடல்-உளத் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரலாம்.

3. தொடர்ச்சியான பணியும் போதிய ஓய்வு இன்மையும். இதனால் விரைவிலேயே நோயாளியாகும் நிலை.

4. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒழுக்கத்தவறுகள் நேரக்கூடிய அபாயம்.

5. குடும்பத்தில் தாயின் அரவணைப்புக் கிட்டாத நிலையில் குழந்தைகள் உளவியல் ரீதியான தாக்கங்களை எதிர்கொள்கின்றனர். கல்வியில் பின்னடைவு, நடத்தைப் பிறழ்வு, பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் முதலான இன்னோரன்ன பிரச்சினைகளை குழந்தைகள் எதிர்கொள்ள நேரலாம்.

6. கணவன்-மனைவியிடையே ஏற்படும் தற்காலிகப் பிரிவு உளவியல் ரீதியான விரிசலை ஏற்படுத்தவும் வேறு தவறான உறவின்பாலான நாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும் தோன்ற இடமுண்டு. (மனைவி அனுப்பும் பணத்தில் வேறு பெண்ணோடு ஜாலியாக இருக்கும் ஆண்களை சமூகத்தில் காணக்கூடியதாக உள்ளதை மறுப்பதற்கில்லை.)

7. மனைவி அல்லது மகள் அல்லது சகோதரி வெளிநாட்டில் உழைக்கும் பணம் முறையாகச் சேமிக்கப்படாமல் குடும்பத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுதல். இதனால், நாடுதிரும்பிய பின் வருடக்கணக்காய் படாதபாடுபட்டு உழைத்து அனுப்பிய பணத்தில் ஒரு சதமேனும் மிச்சமில்லாததையும், எந்தப் பிரயோசனமான வேலையும் செய்யப்படாததையும் கண்டு மனம் குமுறும் அவல நிலை தோன்றுதல்.

8. வருடக்கணக்கில் வெளிநாட்டிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட பின்னர் நாடு திரும்பினாலும் நாட்டில் இருக்கமுடியாமல் திரும்பவும் செல்வதே நல்லது என்பதான ஒருவகை மனப்பதிவு தோன்றுதல். (இப்படியான பெண்களையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.)

9. தனது தவறான நடத்தை அல்லது தன்மீதான பாலியல் வன்முறையின் விளைவால் கருத்தரித்த நிலையில் நாடுதிரும்ப நேரும் பெண்கள் எதிர்கொள்ளும் உடலியல்-உளவியல் மற்றும் சமூகச் சிக்கல்கள்.

10. அவ்வாறு பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் பெரியதொரு கேள்விக்குறியாய்த் தொக்கிநிற்றல்.


இப்படி எத்தனையோ வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இவற்றையெல்லாம் நிவர்த்திக்கக்கூடிய தீர்வு முன்மொழிவுகள் எவ்வாறானதாக அமைய முடியும் என்பது குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த மடலில் பார்ப்போம்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

நாம் தற்போது கலந்துரையாடி வரும் “பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு” என்ற காருப்பொருள் காலத்தின் தேவையும் சமூகத்தின் அவசியமும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்,
பல சகோதரர்கள் எமது வலைப்பகுதிக்கு வந்து வாசித்துவிட்டு தங்கள் ஆலோசனைகளை தராமல் திரும்பிச் செல்வது கவலைகுரியதாகும்.

சகோதரி லரீனா அப்துல் ஹக் அவர்கள் தேவையான பல செய்திகளை பதியவைத்திருக்கிறார்கள், அவர் இன்னும் பல செய்திகளை நமக்காக தருவார், இன்ஷா அல்லாஹ்.

நன்றி.

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

நாம் தற்போது கலந்துரையாடி வரும் “பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு” என்ற காருப்பொருள் காலத்தின் தேவையும் சமூகத்தின் அவசியமும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்,
பல சகோதரர்கள் எமது வலைப்பகுதிக்கு வந்து வாசித்துவிட்டு தங்கள் ஆலோசனைகளை தராமல் திரும்பிச் செல்வது கவலைகுரியதாகும்.

சகோதரி லரீனா அப்துல் ஹக் அவர்கள் தேவையான பல செய்திகளை பதியவைத்திருக்கிறார்கள், அவர் இன்னும் பல செய்திகளை நமக்காக தருவார், இன்ஷா அல்லாஹ்.

நன்றி.

shifa said...

பெண்கள் வாழ்வியல் வருமானத்திற்காக மஹ்ரம் இல்லாமல் வெளிநாடு சென்று வேலை செய்வது தடுக்கப் பட வேண்டும்.
என் மனதில் பட்ட சில தீர்வுகளை எழுதுகிறேன்.
I. ஒவ்வரு கிராமங்களிலும் صندوق الزكاة و صندوق النكاح உருவாக்கலாம். இதன் முலம் எமது பெண்களுக்கு உதவலாம்.
II. உள்ளூர்களிலே சில கை தொழில் நிறுவனக்களை உருவாக்கலாம்.
III. எமது பெண்கள் உள்ளூர்களில் சிறு சிறு வேலைகளை செயவதை வெட்கமாக கருதுகின்றார்கள். மேலும் வெளிநாடு சென்று மார்க்கத்தையும், மானத்தையும் இழந்து நின்று ஊருக்கு பெருமையாய் பணம் அனுப்பும் கவலையான நிலையை எமது பெண்களுக்கு உணர்த்த வேண்டும்.
IV. பணக்காரர்கள் அவர்களிடம் உள்ள மேலதிக சொத்து எலை யுடையது எண்பதை உணர்ந்து செயட்பட வேண்டும்.


قال عليه السلام : "مثل المؤمنين فى توادهم وتراحمهم وتعاطفهم مثلُ الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى"
இதனை நாம் எம் மனதில் பதித்து எமது பெண்களுக்கு உதவி செய்வோம்.
جزاك الله خير الجزاء

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

அல்ஹம்துலில்லாஹ், சிபா அவாகள் நடைமுறை சாத்தியமான, தேவையான சில ஆலோசனைகளை மிகச் சுறுக்கமாக பட்டியலிட்டுள்ளார், அவருக்கு எமது நன்றிகளும் பிராத்தனைகளும் எப்போதும் இருக்கிறது.

எமது வலைப்பகுதிக்கு வந்து செல்லும் அனைவரும் உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தரும் படி தயாவாய் வேண்டுகிறோம்.

நன்றி.

Anonymous said...

லறீனா அப்துல் ஹக் said....

பெண்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வதைத் தவிர்ப்பதற்கான சில தீர்வு முன்மொழிவுகள்


பெண்கள் ஏன் தொழிலுக்காக வெளிநாடு செல்கிறார்கள் என்பதற்கான காரணங்களில் பெரும்பாலானவற்றை வைத்துப் பார்க்கும்போது மிக அடிப்படைக் காரணம் பொருளாதாரப் பிரச்சினையும் அதனை சீர்செய்யாத சமூகத்தின் சீர்கேடான நிலைமையும் தான் என்பது தெளிவாகிறது. இந்த நிலைமையைச் சீர்செய்யும் பெரும் பொறுப்பும் இயலுமையும் நம்முடைய ஊர் பள்ளிவாயிலை மையமாகக் கொண்ட ஊர் ஜமாத், நம்முடைய இஸ்லாமிய இயக்கங்கள் என்பவற்றைச் சார்ந்துள்ளன என்றால் அது மிகையல்ல என்பது என்னுடைய உறுதியான கருத்து.


அ) ஸகாத் பணத்தைச் சரியாகச் சேகரித்து உரியவகையில் பங்கீடு செய்தல்


ஒரு ஊர்ப் பள்ளிவாசலைப் பொறுத்தவரையில் வெறுமனே சந்தா வசூலிப்பது, மையத்தை அடக்கம் செய்ய இடம்கொடுப்பது, நோன்புக் காலத்தில் கஞ்சி பங்கீடு செய்வது, ஹஜ் பெருநாளுக்காக ஊழ்ஹிய்யாவுக்கான குர்பானை பொறுப்பேற்றுப் பங்கிடுவது என்ற அளவில் அதன் பொறுப்பு முற்றுப்பெற்று விடுவதில்லை. மாறாக, அந்த ஊரில் சந்தா செலுத்திவரும் அனைத்துக் குடும்பங்களினதும் நலன் குறித்தும் கரிசனை கொள்ளவேண்டியது அதன் கடமை.


அந்த வகையில், ஊர் ஜமாஅத் 'ஆமிலூன்' எனும் ஜகாத்தை வசூலிக்கும் ஒரு குழுவை பொறுப்பாக நியமித்து ஜகாத்தை மிகச் சரியாக வசூலிப்பதோடு, ஊரில் ஜகாத்தைப் பெற உரித்துடையவர்கள், மிகுந்த தேவை உடையவர்கள் யாவர் என்ற பட்டியலை முன்னுரிமை வழங்கவேண்டிய ஒழுங்கின்படி தயாரித்துக்கொள்ள வேண்டும். அதன்படி, ஏழைகளை வரிசையில் நிறுத்தி ஏதோ கொஞ்சம் அரிசியும் பருப்பும் கையில் பத்தும் இருபதுமாக சில ரூபாய் நோட்டுக்களையும் கொடுப்பதோடு நம் தலை தப்பியது என்று 'எஸ்கேப்' ஆகிவிடாமல், வருடத்துக்கு ஒரு சில குடும்பங்களையாவது முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்து, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை, அதாவது, அதன்பின் அவர்கள் பிறர் தயவை நாடிநிற்காதவாறு ஒரு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வருடந்தோறும் இப்படி தொடர்ந்து செய்துவந்தால், வறுமையைக் காரணம் காட்டி பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்குச் செல்லவேண்டிய அவல நிலை தோன்றாது.


ஆ) பொது நிதியம் ஒன்றை ஸ்தாபித்து உதவுதல்


இதனை இரண்டு அடிப்படையில் மேற்கொள்ளலாம்.

ஒன்று: உதவி என்ற அடிப்படையில்.

மற்றது: வட்டியில்லாக் கடன் என்ற வகையில் தாம் தன்னிறைவு அடைந்தபின் படிப்படியாகத் திருப்பிச்செலுத்தும் அடிப்படையில்.


ஒரு ஊர்ப் பள்ளிவாயிலோ பொதுப் பணியில் ஆர்வமுள்ள இளைஞர் குழுவினரோ முன்னின்று ஒரு உத்தியோகபூர்வ பொதுநிதியம் ஒன்றை பகிரங்கமாக அமைத்துக்கொள்ளல் வேண்டும். ஊரில் உள்ள வயதுவந்த (ஓரளவு வசதியான) குடும்ப அங்கத்தவர்களிடம் இருந்து வாரம் ஐந்து ரூபாய் அல்லது கூடியதோ குறைந்ததோ ஒரு தொகையை நிர்ணயித்து உண்டியல் போன்ற ஓர் ஒழுங்கில் சேகரிக்கும் பணத்தில் இருந்து குறிப்பிட்டளவு பணம் சேர்ந்தபின், ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் பரம ஏழையான குடும்பங்களுக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை ஏற்படுத்திக் கொடுக்கலாம். (கணக்குவழக்குகள் யாவும் மிகக் கவனமாக எழுத்துபூர்வமாகப் பேணப்பட வேண்டியது இங்கு கட்டாய நிபந்தனையாக இருத்தல் வேண்டும்).


உதாரணமாக,


1. தையல், பின்னல் வேலைகள் தெரிந்த பெண்கள் இருக்கும் வீடாக இருந்தால் தையல் இயந்திரமும் துணி, நூல், பெப்ரிக் பெயின்ட் முதலான சாதனங்களைப் பெற்றுக் கொடுக்கலாம்.


2. ஊர்ப் பாடசாலைகளில் வருடாந்தம் மாணவ மாணவிகளுக்கான உடைகளைத் தைக்கும் ஆர்டரை இந்தப் பெண்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். அவ்வாறே, நகர்ப்புற காமண்ட் தொழிற்சாலைகளில் இருந்து துணியை வீட்டுக்குக் கொண்டுவந்து தைத்துக் கொடுக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கலாம்.


3. தையல் பயிற்சி வழங்கக்கூடிய பயிற்சிமையம் ஒன்றை நடாத்தக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதன்போது தையல் தெரிந்த பல பெண்களுக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முடியும். அதேபோல் இம்முயற்சியால், சிறிய காமண்ட் தொழிற்சாலை ஒன்றைக்கூட ஏற்படுத்தும் வாய்ப்பு எதிர்காலத்தில் தோன்ற இடமுண்டு.


4. பலவகையான சமையல்களில் தேர்ந்த பெண்கள் இருக்கும் பட்சத்தில் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகளுக்குத் தேவையான உணவுப் பண்டங்களைத் தயாரித்து விற்பதற்கான சாதனங்களை, வசதிகளைச் செய்து கொடுக்கலாம். திருமணம் மற்றும் பிற வைபவங்களுக்குத் தேவையான உணவுகளை வழங்கும் வகையில் கேட்டரிங் சேர்விஸ் நடாத்த உதவலாம்.


5. வீட்டோடு கொஞ்சம் நிலமும் தண்ணீர் வசதியும் உள்ள பெண்களுக்கு வீட்டுத் தோட்டம் ஒன்றைச் செய்யக்கூடிய வசதிகளைச் செய்து கொடுக்கலாம்.

Anonymous said...

லறீனா அப்துல் ஹக் said....தொடர்


6. கோழி, ஆட்டுப் பண்ணைகளை சிறிய அளவில் செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.


7. பேப்பர் பேக் ஒட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல் முதலான திறன் வாய்ந்த பெண்களுக்கு அதற்கான சாதனங்களை, வசதிகளை வழங்கலாம்.


8. கம்பியூட்டர் கல்வியுள்ள பெண்களுக்கு சிறார்களுக்கு கம்பியூட்டர் டியுஷன் கொடுக்கக்கூடிய வசதி செய்து கொடுக்கலாம். அவ்வாறே, ப்ளஸ் டூ வரை படித்த பெண்களுக்கு டியூட்டரி மூலம் டியூஷன் கொடுக்கக்கூடிய ஏற்பாடுகளை (உரிய கொட்டகை, மேசை, கதிரை, இத்யாதி வசதிகள்) செய்து கொடுக்கலாம்.


9. சிறுவருக்கான இஸ்லாமிய பாலர் பாடசாலை, குர்ஆன் மத்ரஸா என்பவற்றை ஸ்தாபித்து கல்வியும் ஆற்றலும் உள்ள பெண்கள் பணிபுரியும் வகை செய்யலாம்.


10. இவை எதுவுமே சரிவராத ஒரு நிலைதான் காணப்படும் என்றால், ஏழைப் பெண்களுக்கான சுயதொழில் கல்வியைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய ஒரு பயிற்சி மையத்தை இனியாவது ஒழுங்குசெய்து, அதன் மூலம் எதிர்காலத்தில் நம் பெண்கள் தன்னம்பிக்கையோடும் சுயகௌரவத்தோடும் வாழக்கூடிய வாய்ப்பையாவது ஏற்படுத்திக் கொடுக்கலாம்.


11. எல்லாவற்றையும் விட, வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய வகையில் சிறந்த கல்வியை நம் பெண்களுக்கு வழங்குவதற்கு நாம் யாருமே பின்னின்று விடக்கூடாது.


'வறுமையானது குப்ரை நெருங்கச் செய்துவிடும்' என்பது நம்முடைய கண்மணி நபியின் எச்சரிக்கை. எனவே, அந்த வறுமையைப் போக்கி, ஏழைக் குடும்பங்கள் குறிப்பாக ஏழைப் பெண்கள் தன்னிறைவு பெற்று வாழும் வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நேர்த்தியான ஒரு வேலைத்திட்டத்தை வகுத்து நாம் செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.


ஏற்கெனவே ஒரு கட்டுரையில் நான் எழுதியிருந்தது போல, உள்நாட்டிலும் வெளிநாட்டில் வாழும் வசதியுள்ள சகோதரர்கள் ஒன்றுசேர்ந்து மனம் வைத்தால் தத்தமது ஊரில் வருமானம் தரக்கூடிய ஒரு கட்டிடத்தையோ கடைத்தொகுதியையோ கட்டி வாடகை வருமானத்தை இதன்பொருட்டு வக்பு செய்துவிட்டால், இது நடக்கவே முடியாத கற்பனையல்ல என்பதை இன்ஷா அல்லாஹ் காலம் அவர்களுக்கு உணர்த்தும்.


பொது நிதியத்துக்கான நிதியீட்டத்தின் பொருட்டு வேறுசில ஆலோசனைகள்:



1. கட்சிக்கூட்டம், இயக்கரீதியான கூட்டம் என்பவை கோலாகலமாக நடைபெறுவதற்காகச் செலவிடும் பணத்தை அல்லது அதில் ஒரு பகுதியை இதன் பொருட்டு வழங்கலாம்.


2. ஆடம்பரமான திருமண விழாக்களை பிற வைபவங்களை எளிமையாக நடத்திவிட்டு அதற்கான பணத்தை இந்த நிதியத்துக்கு வழங்கலாம்.


3. கௌரவமாக உழைத்துச் சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் தமது மாத, நாள் வருமானத்தில் ஒரு சிறுதொகையைத் தவறாமல் இந்த நிதியத்துக்கு வழங்கி வரலாம்.


4. பிறநாட்டு, பிற நிறுவனங்களின் நன்கொடைகளைப் பெற்று வழங்கக்கூடிய ஏற்பாடுகளைச் செய்ய முனையலாம்.


5. அரசாங்கத்தின் சுயதொழில் உதவித்திட்டத்தின்கீழ் பயன்பெறும் ஏற்பாடுகளை வழங்கி உதவலாம்.

இ) சீதனப் பிரச்சினையை ஒழித்துக்கட்டுதல்


சீதனம் எடுப்பதையும் கொடுப்பதையும் ஒழித்துக்கட்டும் போராட்டத்தை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும். இந்த சீர்கேடு ஒழிந்தால், சமூகத்தில் நிறையப் பிரச்சினைகள் தீரும் என்பது உறுதி.


என்ன செய்யலாம்?


1. சீதனம் எடுப்பதும் கொடுப்பதும் வட்டியைப் போலவே ஹராம் என்பதை உணர்த்தும் பிரசாரங்களை வலுவாக முன்னெடுத்தல்.


2. சீதனம் வாங்கி நடக்கும் கல்யாணம் என்றால், அது குடும்பக் கல்யாணமே என்றாலும் அதில் பங்குகொள்வதை முற்றாகப் புறக்கணித்தல்.


3. அதனை பகிரங்கமாக அறிவித்து, சீதனம் என்ற பேச்சு வந்தாலே வெட்கக்கேடு, கேவலம், அவமானம் என்பதான மனப்பதிவு மக்கள் மத்தியில் தோன்றுமாறு செய்தல்.


4. குத்பாப் பிரசங்கங்களில் சீதனத்தின் இழிவு குறித்து அடிக்கடி பேசப்படுமாறு பார்த்துக் கொள்ளுதல்.


(அதுசரி, பெற்றோர் சீதனம் வாங்குமாறு நிர்ப்பந்திக்கும் பட்சத்தில் என்ன செய்வது? வேறென்ன, 'அப்படியா? அப்போ எனக்குக் கல்யாணமே வேண்டாம்' என்ற பதிலுக்கு மிரட்டினால் போச்சு! என்ன, சரிதானா சகோதரர்களே? . அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமான விடயத்தில் பெற்றோருக்குக் கீழ்படிய வேண்டியதில்லை அல்லவா?)


ஏதோ, என் சிற்றறிவுக்கு எட்டிய சில ஆலோசனைகளை முன்வைத்துவிட்டேன். அவை குறித்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்.

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

சகோதரி லரீனா மற்றும் சிபா ஆகியோரின் பங்களிப்பும் ஆலோசனைகளும் சமூகத்தில் உயிரூட்டப்பட வேண்டியதாகும்.

இது போன்ற நடைமுறை சார்ந்த சிந்தனைகளை நீங்களும் இங்கு பதியுமாறு அனைத்து சிந்தனையாளர்களுக்கும் அன்பாக அழைப்புவிடுக்கிறேன்.

நன்றி.

Anonymous said...

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள உலமா சபைகள் அங்குள்ள பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வேளைவாய்ப்பு நிருவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டு வேளைவாய்ப்புக்களை இல்லாது செய்யலாம்.

அதற்கு பதிலாக உள்ளூர் சிறு கைத் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கலாம். நன்றி அமீர்