இஸ்லாமிய பார்வைக்குள் படைப்பிலக்கியம் iv

Thursday, May 06, 2010 ன் தொடர்......

மாற்றங்கள் தேவை - சுவை 15

அல்குர்ஆனின் அழகிய உதாரணங்கள்:

                                                                          அபூ அனூத், இலங்கை.


அல்குர்ஆனின் அழைப்புகளில், இயற்கையை நோக்கிய அழைப்புகள் அனைத்தும் மனிதப் புலன்களை விளிக்கச் செய்கின்றன. நமக்குள்ளேயும், வெளியேயும், பிரபஞ்சத்திலுமாகப் பரவிக் கிடக்கும், அல்லாஹ் அமைத்துள்ளவற்றின் அழகை, மனித உணர்வுகள் அருந்த வேண்டுமென அது எதிர்பார்க்கிறது.

ஆனால், பல மதங்களும் நாகரிகங்களும் அதன் பிரதிநிதிகளும் இயற்கை அழகை, கல்லிலும் காகிதத்திலும் வடித்து, சிற்பத்தில் செதுக்கினரே தவிர, அவற்றுக்குப் பின்னால் அவற்றை இயக்கிக் கொண்டிருக்கும் ஏகனாகிய அர்ரஹ்மானைப் புரிந்து கொள்ளவில்லை. அல்லது சரியான புரிதலில் தவறிழைத்து விட்டனர்.

இறைவன் மனிதனை அழகிய உருவத்தில் வடிவமைத்திருக்கும் போது, தான் பார்க்காத இறைவனை, தன்னால் பார்க்கவும் ரசிக்கவும் முடியாத உருவங்களில் செதுக்கி,அதை வழிபட்டுக்கொண்டிருக்கின்றான் மனிதன். இறைவனை எந்த வடிவிலும் உருவமாக்கி வழிபடுவதை இஸ்லாம் வன்மையாக கண்டித்துள்ளது.


'அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ, அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!

இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான் என்றும் கூறுவீராக!)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.(07:194-197)

இயற்கையாகவே மனிதன் பால் அழகுணர்வு ரசணை அமைந்து காணப்படும் ஒரு பண்புதான். அவன் இயற்கையின் எழிலில், பச்சைப் பசேலென்ற பசுமையின் ஸ்பரிசத்தில், பாடும் பறவையினத்தில், கூவும் குயிலினத்தில், ஓடும் மானில், தேனின் சுவையில், தேனீயின் களி நடனத்தில், வண்டுகளின் ரீங்காரத்தில், தீண்டும் தென்றலில் மலர்களும், செடிகொடிகளும் ஆடி அசைவதில், சூரியனைக் காதலிக்கும் சூரிய காந்தியில், இவ்வாறு, அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகளில், மனிதன் அழகைத் தரிசித்து, அனுபவிக்கிறான். இந்தத் தரிசனம் அவனது உள்ளத்தில் நிறைவையும் நிம்மதியையும் விவரிக்க முடியாத இன்பக் களிப்பையும் ஏற்படுத்துகின்றன.

நிச்சியமாக நாமே (பூமிக்கு) அண்மையில் இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கின்றோம். (அல்குர்ஆன் 37:06)

அழகு பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆனிய வசனங்கள் ஆழமான கருத்துக்களைப் புலப்படுத்துகின்றன. தன்னிலே அழகான இறைவன், அழகை அவன் நேசிப்பதற்குச் சான்றாய் படைப்பினங்களையும் அழகுற அமைத்துள்ளான்.

அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன். (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:14)

படைப்பினங்கள் அனைத்தையும், அழகுற வடிவமைத்த இறைவனின் மாட்சிமையையும், மகோன்னதத் தன்மையையும் உணர்த்தி, மனிதனின் அடிமை நிலையைச் சொல்லிக் கொடுத்து, அடிபணியத் தூண்டி, அல்லாஹ்வைப் புகழ வைக்கிறது அல்குர்ஆன்.

இவ்வாறு, அல்குர்ஆன் பல உதாரணங்களை மிக எளிமையாக அதே வேளை உயிரோட்டத்துடன் உவமையாக்கியுள்ளது. அது, இயற்கை அழகு பற்றிப் பேசும் போது, அவை உள்ளத்தை ஊடுருவிச் சென்று கொள்ளை கொள்கிறது.

உதாரணமாக
வல்லைலி இதா அஸ்அஸ
(இருட்டைக் கொண்டு வரும் இரவின் மீது சத்தியமாக!)
 وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ [التكوير : 17]
இருட்டைக் கொண்டு வரும் என்ற பொருளுக்காக இங்கே தேர்ந்தெடுக்கப்பட்டடிருக்கும் அரபி வார்த்தை அஸ்அஸ என்பதாகும். இது அஸ் அஸ் என்ற இரு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இரவு நேரத்தில் காணப்படும் கருமை இருளின் உயிரோட்டத்தை, இசை லயத்துடனும் இலக்கிய இன்பத்துடனும் இந்த வார்த்தை சொல்லிக் காட்டுகின்றது.

இரவு, நம் கண்களுக்குப் புலப்படாத, தனது கால்களாலோ, அல்லது கைகளாலோ நள்ளிரவுக் காவலனைப் போல், காவல் புரிவதாக இந்த சொல்லாட்சியின் பொருள் விரிக்கின்றது. அஸ்அஸ என்ற வினைச் சொல்லுக்கு நள்ளிரவில் நகர்வலம் வந்து, காவல் புரிந்தான் என்ற பொருளும் உண்டும். இது, அற்புதமும் ஆச்சரியமுமான போற்றத் தக்க சொல்லாட்சியாகும்.

இதேபோன்று, வஸ்ஸுப்ஹி இதா தனப்பஸ (மெல்ல மெல்லப் புலரும் அதிகாலைப் பொழுதின் மீது சத்தியமாக!) இதுவும் முன்னர் குறிப்பிட்டது போன்ற ஓர் அரிய, மெச்சத்தக்க சொல்லாட்சியாகும். ஏன்? அதைவிடவும் இது ஓர் உயிரோட்டமான சொல்லாட்சியாகும். இங்கே, அதிகாலைப் பொழுது மூச்சு விரிவடைந்து கொண்டே வந்து, பளீரென அது விழித்து எழுவதைப் போலவும் சித்திரித்துக் காட்டப்படுகின்றது.

மெல்ல மெல்லத் தோன்றும் அந்த அதிகாலைப் பொழுதின் வெளிச்சமும், பொழுது விடிய ஒவ்வொரு உயிரிலும், பொருளிலும் ஏற்படும் புத்துணர்ச்சியும் இயக்கமுமே இங்கே மூச்சுகளாகச் சூட்டப்படுகின்றன.

விடிந்து கொண்டு வரும் காலைப் பொழுதை நாம் விழித்திருந்து கவனிக்கும் போது, புள்ளினங்களும் பிற உயிரனங்களும், உழவர்களும், வியாபாரிகளும் ஏன் உலகத்தின் ஒவ்வொரு பொருளுமே மெல்ல மெல்லத் தன் இயக்கங்களை ஆரம்பிக்கும் போதும், அதற்கேற்ப அந்தக் காலைப் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக விடிந்து கொண்டே வரும் போதும், நம் கண் முன்னால், அந்த விடிகாலைப் பொழுது சுவாசிப்பதைப் போன்ற ஒரு பிரமை எழுவது நிஜம். அந்த உயிரோட்டமான அதிகாலைப் பொழுதின் விடியல் காட்சிகளைத் தான் இந்த சொல்லாட்சி அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

'வஸ்ஸுப்ஹி இதா தனப்பஸ' என்ற இவ்விரு வசனங்களின் இலக்கிய அழகையும் நயத்தையும் ஃபீ ழிளாழில் குர்ஆன் என்ற தனது நூலில் விளக்கும் செய்யித் குதுப் 'சிறந்த இலக்கிய வளம் கொண்ட, மிக உயிரோட்டமுள்ள, உவமான உவமேயங்களைக் கொண்ட அரபி மொழியானது, காலைப் பொழுதை வர்ணிப்பதற்கு, அல்குர்ஆன் இத்திரு வசனத்தில் பயன்படுத்தியிருப்பது போன்ற ஓர் உருவகத்தைக் கொண்டுள்ளதா என நான் சந்தேகிக்கிறேன். அரபி மொழியின் அனைத்து ஆக்கங்களும் கூட, அதிகாலைப் பொழுதை பற்றி இங்கே கையாளப்பட்டிருக்கும் சொல்லாட்சிக்கு ஈடு இணையாகாது என்று நான் துணிந்து சொல்வேன்' என்கிறார்.

இலக்கியச் சுவையை ரசிக்கும் திறனும் கற்பனை வளமும் பொருந்திய ஒவ்வொருவரும், இயற்கையை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனும், இந்த வசனங்களில் நாம் வர்ணித்துக் காட்டியதை விடவும் அதிகமான சொல் வளத்தையும் அதியற்புதனமான, அரிய மெச்சத்தக்க பேருண்மைகளையும் இப்பிரஞ்சத்தின் எழிமையான தோற்றங்களையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கைக் காட்சிகளையும் உணர்ந்து ரசிக்கலாம்! ஒரு மிகப் பெரிய இஸ்லாமியக் கவிஞனாகவே மாறிவிடும் அளவுக்கு அவ்வளவு கற்பனை வளத்தைப் பெறலாம்!

இவ்வாறு அல்குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளவற்றில் சில உதாரணங்களை இங்கே தருகின்றோம்.

இரவு-பகல்:

இரவு - பகல், சூரியன் - சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(16:12)

இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும் பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.(10:67)

அதிகாலைப் பொழுதும் வெள்ளைக் கயிறும்:

வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்) கருப்புக் கயிறிரிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!(2:187)

சொர்க்கச் சோலை:
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதி யில் ஆறுகள் ஓடும். அதில் தமது இறைவனின் விருப்பப்படி நிரந்தரமாக இருப்பார்கள். ஸலாம் என்பதே அதில் அவர்களின் வாழ்த்தாக இருக்கும்.(14:23)



உறுதியான - உறுதியற்ற மரங்கள்:
நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும் அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.

தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.

தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப்பட்டுள்ளதுளூ அது நிற்காது.(14:24-28)

வழுக்குப் பாறையில் பெய்த மழை:
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல் உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும் தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

நல் வழியில் செவு செய்வோர்:
அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும் தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம் உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.(2:264)

பேரொளியும் - காரிருளும்
அவர்களின் பார்வைகளை மின்னல் பறித்து விடப் பார்க்கிறது. (அது) அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும் போது, அதில் நடக்கின்றனர். அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது, நின்று விடுகின்றனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களின் செவியையும் பார்வைகளையும் போக்கியிருப்பான். எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (2:20)


தீய வழி நஷ்டம் தரும் வியாபாரம்:
அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர்.(2:16)

நயவஞ்சகர்களுக்கு உதாரணம்:
ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கிய போது, அவர்களின் ஒளியைப் போக்கி பார்க்க முடியாமல் இருள்களில் அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழி கேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது. (2:17-20)

(இவர்கள்) செவிடர்கள் ஊமைகள் குருடர்கள். எனவே இவர்கள் (நல் வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.(2:18)

யூதர்களின் கடின உள்ளம்:
இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (2:74)

ஏக இறைவனை மறுப்போரின் தன்மை:
வெறும் சப்தத்தையும் ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்ளூ ஊமைகள்ளூ குருடர்கள். எனவே விளங்க மாட்டார்கள். (02:171)

நல் வழியில் செலவிடுவோருக்கு உதாரணம்:
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்ளூ அறிந்தவன்.(2:261)



பிறர் மெச்ச செவிடுபவனுக்கு உதாரணம்:
பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன். அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன. அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது. அப்போது, நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி, அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.  (2:266)

இறை நம்பிக்கையற்றோரின் தர்மம்:
இவ்வுலக வாழ்க்கையில் அவர்கள் செலவிடுவதற்கு உதாரணம் வெப்பக் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கு இழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர். (3:117)

சத்தியத்தை ஏற்க மறுப்போர் செத்த பிணத்திற்கு உதாரணம்:
இறந்தவனை உயிர்ப்பித்து மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன் இருள்களில் கிடந்து அதிரிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன. (2:122)

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.(27:80)

இறை வசனங்களை நிராகரிப்பவர்களை செவிடர்களுக்கும் ஊமைகளுக்கும் ஒப்பிடுதல்:

'வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்? என்று (முஹம்மதே!) கேட்டு அல்லாஹ் என்று கூறுவீராக! அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும் தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள என்று கூறுவீராக! குருடனும் பார்வையுள்ளவனும் சமமாவார்களா? இருள்களும் ஒளியும் சமமாகுமா? என்று கேட்பீராக! அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்ளூ அவன் தனித்தவன்ளூ அடக்கியாள்பவன் என்று கூறுவீராக!' (13:16)

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்கள்ளூ ஊமைகள். இருள்களில் அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் செலுத்துகிறான். (6:39)

மழை மேகத்தை கருவுற்ற பெண்ணுக்கும் மழை பொழிவதை பிரசவிப்பதற்கும் ஒப்பிடுதல்:

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும். (7:57)

இறை வசனங்களை மறுப்போரை நாக்கைத் தொங்க விடும் நாய்க்கு ஒப்பிடுதல்:

நாம் நாடியிருந்தால் அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! (7:176)

சத்தியத்தை ஏற்க மறுப்போரை கால்நடைகளுக்கு ஒப்பிடுதல்:
ஜின்களிலும் மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். (7:179)

தவறான கொள்கையில் இருப்பவன் ஆற்றோரத்தில் கட்டும் கட்டடம்:
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும் அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (9:109)

அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு உதாரணம்:
உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.(13:14)

நிராகரிப்பவர்களின் செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிடுதல:;
தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெற மாட்டார்கள். இதுவே (உண்மையிரிருந்து) தொலைவான வழி கேடாகும். (14:18)

திடீரென்று அழிந்து போகும் செழிப்பான தோட்டத்திற்கு உலக வாழ்க்கையை ஒப்பிடுதல்:
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம் வானிரிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும் கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ பகரிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். (10:24)

அசத்தியத்தை நீர்க்குமிழிக்கும் சத்தியத்தை பயனுள்ள பொருளுக்கும் ஒப்பிடுதல்:
வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும் பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (13:17)

போலி தெய்வங்களை எதற்கும் இயலாத அடிமைக்கு ஒப்பிடுதல்:
எதற்கும் சக்தி பெறாத பிறருக்கு உடைமையான அடிமையையும் யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். இவன் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் அதிரிருந்து (நல் வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (16:75)

சத்தியத்தை எடுத்துச் சொல்ல மறுப்பவனை எதற்கும் இயலாத ஊமை அடிமைக்கு ஒப்பிடுதல:;
இரண்டு மனிதர்களை அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். அவர்களில் ஒருவன் ஊமை. எதற்கும் சக்தி பெற மாட்டான். அவன் தனது எஜமானனுக்குப் பாரமாக இருக்கிறான். எங்கே அவனை அனுப்பினாலும் நன்மையைக் கொண்டு வர மாட்டான். இ(த்தகைய)வனும் நேரான வழியில் இருந்து கொண்டு நீதியை ஏவுபவனும் சமமாவார்களா? (16:76)

சத்தியம் செய்து அதை மீறுபவனை உறுதியாக நூல் நூற்று அதை அறுத்தவனுக்கு ஒப்பிடுதல்:
உறுதியாக நூற்று பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான். நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில்1 அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான். (16:92)

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனுக்கு ஆகாயத்திலிருந்து கீழே விழுபவனை உதாரணமாகக் கூறுதல்:
அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திரிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல் அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய்ப் போட்டவனைப் போல் ஆவான். (22:31)

இணை கற்பிப்போருக்கு மற்றொரு உதாரணம்:
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.(22:73)

நிராகரிப்பவர்களின் செயல்களை ஆழ்கடல் இருட்டில் தன் கையையே காண முடியாத நிலையில் இருப்பவனுக்கு ஒப்பிடுதல்:

அல்லது ஆழ்கடரில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது.303 அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை. (24:40)

இறைவனுக்கு இணை கற்பிப்போரை சிலந்திப் பூச்சிக்கு ஒப்பிடுதல:
அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (அதை) அவர்கள் அறியக் கூடாதா? (29:41)

கற்றபடி செயல்படாதவர்களை ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பிடுதல்:
தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான். (62:5)

இவ்வாறு அல்குர்ஆன் பற்பல அழகிய உதாரணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வளவு அற்புதமான இலக்கியத்தை விட்டு விட்டு, இளைஞர்களே! ஏன் குப்பைகளை நாடிச் செல்கிறீர்கள்? இதில் காணப்படும் ஓர் இலக்கிய நயத்திற்கும் சுவைக்கும் ஈடாக வேறொன்றை உங்களால் காண்பிக்க முடியுமா?முடியாதிருக்க ஏன் இஸ்லாமியப் பெயர்தாங்கிய, அதேவேளை இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் குப்பைகளை நாடிச் செல்கின்றீர்கள்.

அல்குர்ஆன் உயிரோட்டத்துடன் சித்திரித்துக் காட்டும் இப்பிரபஞ்சத்தின் எழில் மயமான காட்சிகள், அந்தக் காட்சிகளின் ஆன்மாக்களோடு, மனித ஆன்மாவையும், அவனது உயிரையும் ஒன்றிவிடச் செய்யும் படியான அழகிய ஜீவனுள்ள சொல்லாட்சிகள். அந்தக் காட்சிகள் அவன் ஆன்மாவில் சிந்தும் இரகசியங்கள். அவற்றின் பின்னணியில் காணப்படும், அவற்றை ஆட்டிப்படைக்கும் மகத்தான இறையாற்றல் ஆகியவற்றைப் புரிந்து கொண்டதன் பின்னர், அந்த மகத்தான மகோன்னதமான சக்தியை நம்பச் சொல்லித் தூண்டுகிறது. வணங்கி வழிபட அழைப்பு விடுக்கிறது. இன்னும், இவை எமது காதுகளில் விழவில்லையா?

ளைஞர்களே!

நீங்கள் எதன் பின்னே செல்கின்றீர்கள்?

நீங்கள் எந்த இலக்கியவாதிகளின் பின்னே செல்கிறீர்களோ, அவர்களுடைய உணர்வுகள் கீழ்த்தரமானவை,

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவை.

உண்மைக்கு மாற்றமானவை.

'கவிஞனுடைய அணுகுமுறை உணர்வுப்பூர்வமானது. அறிவுப்பூர்வமானதன்று. அவனது பணி மெய்ப்பித்துக் காட்டுவதன்று. உணரச் செய்வதேயாகும்' என நெய்ல்சன் கூறுகின்றார்.

நெய்ஸ்ஸனின் கருத்து, இஸ்லாமியக் கவிஞனுக்குப் பொருந்தாது. இஸ்லாம் கூறும் உண்மைகளை மெய்ப்பித்துக் காட்டுவதைப் புறக்கணித்து விட்டு, வெறும் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு, மனம் போன போக்கில் இலக்கியம் படைக்க இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.

இஸ்லாம் என்பது உறுதியானதும் நிலையானதுமாகும். அதன் முதன்மை மூலாதாரம் அல்குர்ஆன். அதன் விளக்கவுரை நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள். அது, 'இஸ்னாது' எனும் சான்றாதாரங்களின் தூணின் மீது உறுதியாக நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இலக்கியத்திற்கு இஸ்லாம் வழங்கியுள்ள முக்கியத்துவத்தை மிகச் சரியாக உணர்ந்து அதன் நெறிமுறைகளுடனும் உன்னத இலக்குடனும் இஸ்லாமிய இலக்கியம் படைக்கப்படல் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

இம்முயற்சிகள் முனைப்புடன், திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதன் மூலம், பிற அந்நிய, ஆபாச இலக்கிய அலைகளின் தாக்கங்களிலிருந்து எமது இளம் சந்ததியினரைப் பாதுகாக்க முடியும்.

இன்று, இளைய தலைமுறையினர் சிறந்த இஸ்லாமிய இலக்கியத்திற்காக ஏங்கியும், இரந்தும் நிற்கின்றனர். அல்குர்ஆனின் அறிவுச் சுணையிலிருந்தும் நபிகளாரின் பொன் மொழிகளிலிருந்தும் அழகொளிரும் இயற்கைக் காட்சிகளிலிருந்தும் இஸ்லாமிய அகீதாவு(கொள்கை)க்கு முரணாகாத இலக்கியங்களை வழங்க இஸ்லாமியக் கற்கைத் துறை சார்ந்தோர் முன்வருவார்களா?

முயற்சிப்பார்களா?

அந்த எதிர்பார்ப்புடன் விடைபெறுகின்றோம்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: