கடந்த 14 / 08/2010 அன்று சகோதரி மாஷா நசீமுக்கு ஒரு திறந்த மடல் என்ற மடலை பதிவுசெய்திருந்தது அனைவரும் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ், இது எல்லா முஸ்லிம் சகோதரிகளுக்கு நல்ல உபதேசமாகவும் ஞாபகமூட்டலாகவும் அமையும் என நினைக்கின்றேன். இந்த மடலை பார்த்த பல சகோதர, சகோதரிகள் இது தொடர்பாக பல கருத்துக்களை அனுப்பியிருந்தனர். (அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்). அவைகளில் மிகத்தேவையான செய்திகளை உள்ளடக்கிய ஒரு மடலை உங்களுக்கு இங்கு தருகிறேன். இது தொடர்பாக நீங்களும் உங்கள் கருத்துக்களை தவறாது அனுப்பிவைக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------- ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சகோதரர் றிழ்வான் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்!
சகோதரி மாஷா நசீமுக்கு அன்பு நிறைந்த மடல் படித்தேன். அவசியமான மற்றும் சிறந்ததொரு பதிவு என்பதில் இரு கருத்தில்லை. ஆனால் அது சற்று விரிவாக அமைந்திருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. எனவே நானும் சில கருத்துகளை வரைகின்றேன்.
இந்த காலத்தில் இதையெல்லாம் பார்த்தால் முடியுமா? என்பது தான் தற்போதைய நங்கைகளின் எண்ணமாக இருக்கின்றது. மேலாடை சுதந்திரம் எனும் பெயரில் ஆடைகளின்றி நங்கையர் வலம் வரும்; போது அதற்கு உலகின் பல நாடுகளும் அனுமதியும் வழங்கி இருக்கும் போது முற்றிலும் மறைத்து வெளிவருவது சற்று சிரமமானதாகவே அவர்களுக்கு படுகின்றது. அதற்கு காரணம் ஃபர்தா என்பது கருப்பு நிற உடை என நினைப்பது தான்.
இந்த படத்தை பாருங்கள்.
இங்கே நிற்கும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் அணிந்திருப்பதும் ஃபர்தா தான். உலகை வெறுத்து சேவைகள் செய்யும் கன்னியாஸ்திரிகளால் தான் அவ்வாறு இருக்க முடியும், நம்மால் முடியாது எனும் முடிவுக்கு வந்து விட வேண்டாம். அருகே நிற்கும் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டில் அவர்களும் ஃபர்தா அணிந்து தான் நிற்கின்றார். ஒரு நாட்டின் ஜனாதிபதி ஃபர்தா அணிந்து உலகின் பல நாடுகளுக்கும் சென்று வரும் போது நம்மால் முடியாதா?
அடுத்த படத்தை கவனியுங்கள்.
இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் ஃபர்தாவுடன் காட்சி அளிக்கின்றார். கடற்கரையில் முழு நிர்வாணமாக கிடக்கும் கலாச்சாரத்தை கொண்ட இங்கிலாந்து நாட்டின் ராணி, வெளி இடங்களுக்கு செல்லும் போதும் உலக தலைவர்களை சந்திக்கும் போதும் இந்த உடையைத் தான் தேர்ந்தெடுக்கின்றார். ஏனெனில் இது தான் அவருக்கு கண்ணியமாக படுகின்றது. அவருக்கு மட்டுமல்ல உலகின் எந்தவொரு பெண் தலைவரும் ஆபாச ஆடைகளை கண்ணியமானவை என்று சொன்னதில்லை. எனவே சகோதரி மாஷா நஷீம் அவர்கள் முகம், முன் கைகளை தவிர பிற அவயங்களை மறைப்பது அவசியமானதாகும். அவ்வாறு உடலை மறைக்கும் போது அந்நியர்களின் கோரப் பார்வையிலிருந்தும் தவறான எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பு பெறுவதோடு இறைவனின் கட்டளையை நிறைவேற்றியதற்கான நன்மைகளையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
அத்துடன் தனிமையில் பிற ஆண்களுடன் உரையாடுவது, கை குலுக்குவது, தந்தை அல்லது சகோதரனின் துணையின்றி நீண்ட தூரங்களுக்கு பயணம் செய்வது போன்றவற்றை தவிர்த்து கொள்ள வேண்டும். இவைகள் உங்கள் வளர்ச்சிக்கு தடையல்ல, வளர்ச்சிக்கான ஊக்கமே. ஏனெனில் இஸ்லாம் என்பது பிற மதங்களை போல் பெண்களை வீட்டில் முடக்கி போடும் மதமல்ல, பெண்களுக்கு அதிகமான உரிமைகளை பெற்று தந்துள்ள மார்க்கமாகும். நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவியும் மூமின்களின் அன்னையுமான ஆயிஷா(ரலி) அவர்கள், மிகப்பெரிய அறிஞராக இருந்தவர். அவரிடம் கல்வி கற்க ஆண்கள், பெண்கள் என்ற பேதமின்றி ஏராளமான ஸஹாபாக்கள் வந்து கொண்டே இருப்பர். ஆனால் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்டு ஃபர்தா முறையை பேணித் தான் அவர்கள் கல்வியை வழங்கினார்கள். கைகுலுக்குதல், தனிமை பயணம், வீண் பேச்சு இவை எதுவுமே அவர்களிடம் இருந்ததில்லை என்று வரலாறு கூறுகின்றது. எனவே அந்த அன்னையை முன்னுதாரணமாகக் கொண்டு தாங்களும் சென்று சாதனை படைக்க வேண்டுமென்பதே எங்களின் ஆவல். ஏனெனில் தங்களை தொடர்ந்து வர காத்திருக்கும் இஸ்லாமிய சகோதரிகள் ஏராளம். எனவே அதை உணர்ந்து இஸ்லாமிய வரம்பிற்குள் நின்று கொண்டு மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துகின்றேன்.
தங்களை நேரில் பார்க்காவிடினும் தங்களின் வளர்ச்சியையும் உயர்ச்சியையும் காண இறைவனிடம் மன்றாடும் ஏராளமான உள்ளங்கள் இங்கே இருக்கும் அதே வேளையில் உங்களின் வீழ்ச்சியை காணவும் இஸ்லாமிய வரம்பிலிருந்து தங்களை சிறிது சிறிதாக விலக்கவும் சில கூட்டங்கள் காத்துக் கொண்டிருப்பது நீங்கள் அறியாத உண்மை. அத்தகையவர்களிடமிருந்து இறைவன் தங்களையும் தங்களைப் போன்ற இஸ்லாமிய சகோதரிகளையும் பாதுகாக்க வேண்டும். தங்களுக்காக எனது பார்வையில்பட்ட 'ஃபர்தாவுக்குள் பிரபலங்கள்' சிலரை பார்வைக்கு வைக்கின்றேன்.
உடல் அசைவுகளுக்கு இதுதான் சௌகரியம் என நினைத்து டூ பீஸ் எனும் ஒட்டுத் துணிகளை உடுத்து உலகளாவிய ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு மத்தியில் ஒரு பெண் உடலை மறைத்து தனது ஓட்டத்தை துவங்கினார். துவக்கத்தில் அவரை பார்த்து சிரிக்க வைத்தவரை இறுதியில் நாணி தலைய குனிய வைத்தார். அவர் தான் ருகையா என்ற பெண்மணி. பஹ்ரைன் நாட்டை சார்ந்த இவர் 200 மீட்டர் ஓட்டத்தில் பர்தா அணிந்து விளையாடி தங்கபதக்கம் பெற்று உலக சாதனை புரிந்தார்.
மடோனா நஜாரியன் என்ற இந்த மங்கைக்கு டென்னிஸில் சாதனை படைக்க ஃபர்தா தடையாக இருக்க வில்லை.
ஈரானிய மங்கைகள் அந்நிய ஆண்களுக்கு தங்கள் அவயங்களை காண்பிக்காமல் இந்த வருட ஒலிம்பிக்கில் கால்பந்து விளையாட முனைந்ததால் அவர்கள் ஆட அனுமதிக்கப்படவில்லை. ஆக, சௌகரியம் என்பது மனதை பொறுத்ததே. கண்ணியமான உடை என்றால் அது ஃபர்தா என்பதற்கு இன்னும் உதாரணம் வேண்டுமோ?
- வளைகுடாவாசி -
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
1 comment:
Assalamu alaikkum Brothers and sisters,
this is very good message to today's world.
thanks
Post a Comment