நேரம் for கருத்துப் பரிமாற்றம், கருத்து - 02
பறக்கப் பறக்க பெண்ணின வாதம் (feminism) பேசுகின்றவர்களாலும் தீர்வு கானமுடியாத ஒரு பிரச்சினையாக பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் அது தொடர்பான விடயங்களும் தொடர்கின்றன………
பெண்கள் வீட்டின் அரசிகளாக,
பெண்கள் வீட்டிள் கண்களாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமும் பெளகுத்தறிவாதமும் சொல்லி நிற்பது.
கடந்த மாதத்திற் (12/2010) கான கருத்துப் பரிமாற்ற கருவாக ‘பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு' (Foreign job and our mothers) வெளியிடப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ், பலர் இணைந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களையும் சிந்தனைகளையும் வழங்கி இருந்தனர்.
அவர்கள் வழங்கி கருத்துக்களே இந்த தலைப்புக்குக்கு தேவையாக இருப்பதால் அவைகளை இங்கு தொகுப்பாக வழங்குகின்றேன்.
பெண்களை பற்றி அவர்களின் நிலை, அவர்களின் எதிர்காலம் குறித்து எமது சகோதரிகளில் ஒருவர் இங்கு பதிந்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமானதாகும்.
Lareena AH said......
பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?
1. குடும்பத்தின் வறுமை நிலையும், குடும்பப் பொருளாதாரத் தேவையை நிவர்த்திப்பதைப் பொறுப்பேற்க ஆண்கள் இல்லாத நிலைமை.யும். (கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்களும் தந்தையை இழந்த பெண்களும் இதில் பெரிதும் உள்ளடங்குகின்றனர்)
2. சமூகத்தில் தலைவிரித்தாடும் சீதனப் பிரச்சினை. சீதனமாகக் கேட்கப்படும் வீடு, நகை, ரொக்கம் என்பவற்றைத் தனக்காக, தன் சகோதரிக்காக அல்லது மகளுக்காகச் சேகரித்துக்கொள்ளும் நோக்கில் வெளிநாடு செல்லுதல்.
3. கணவனுக்கு நல்லதொரு தொழில் இல்லாத நிலையில் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்யவென்று கணவன்மாராலேயே வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுதல்.
4. பிறர் வெளிநாடு சென்று வருவதைப் பார்த்து ஆடம்பர மோகத்தில் வெளிநாடு செல்லுதல்.
5. நாட்டில் கடுகதி வேகத்தில் அதிகரித்துச் செல்லும் விலைவாசியை ஈடுகட்டி அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற ஒரு சாதாரண சம்பளமெடுக்கும் தொழில் போதுமானதாக இராது என்ற அவநம்பிக்கை உணர்வு.
6. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் கவர்ச்சிகரமான சலுகைகள், விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு வெளிநாடு செல்லுதல்.
இப்படி பல காரணங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துவதை அறியலாம்.
பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்வதன் எதிர்விளைவுகள் யாவை?
1. குடும்பத்தினரை நீண்ட நாட்கள் பிரிந்திருக்க நேர்தல். இதனால் உடல் மற்றும் உளரீதியான தாக்கங்களை எதிர்கொள்ள நேர்தல்.
2. பணியிடத்தில் பல்வேறு உடல்-உளத் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரலாம்.
3. தொடர்ச்சியான பணியும் போதிய ஓய்வு இன்மையும். இதனால் விரைவிலேயே நோயாளியாகும் நிலை.
4. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒழுக்கத்தவறுகள் நேரக்கூடிய அபாயம்.
5. குடும்பத்தில் தாயின் அரவணைப்புக் கிட்டாத நிலையில் குழந்தைகள் உளவியல் ரீதியான தாக்கங்களை எதிர்கொள்கின்றனர். கல்வியில் பின்னடைவு, நடத்தைப் பிறழ்வு, பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் முதலான இன்னோரன்ன பிரச்சினைகளை குழந்தைகள் எதிர்கொள்ள நேரலாம்.
6. கணவன்-மனைவியிடையே ஏற்படும் தற்காலிகப் பிரிவு உளவியல் ரீதியான விரிசலை ஏற்படுத்தவும் வேறு தவறான உறவின்பாலான நாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும் தோன்ற இடமுண்டு. (மனைவி அனுப்பும் பணத்தில் வேறு பெண்ணோடு ஜாலியாக இருக்கும் ஆண்களை சமூகத்தில் காணக்கூடியதாக உள்ளதை மறுப்பதற்கில்லை.)
7. மனைவி அல்லது மகள் அல்லது சகோதரி வெளிநாட்டில் உழைக்கும் பணம் முறையாகச் சேமிக்கப்படாமல் குடும்பத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுதல். இதனால், நாடுதிரும்பிய பின் வருடக்கணக்காய் படாதபாடுபட்டு உழைத்து அனுப்பிய பணத்தில் ஒரு சதமேனும் மிச்சமில்லாததையும், எந்தப் பிரயோசனமான வேலையும் செய்யப்படாததையும் கண்டு மனம் குமுறும் அவல நிலை தோன்றுதல்.
8. வருடக்கணக்கில் வெளிநாட்டிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட பின்னர் நாடு திரும்பினாலும் நாட்டில் இருக்கமுடியாமல் திரும்பவும் செல்வதே நல்லது என்பதான ஒருவகை மனப்பதிவு தோன்றுதல். (இப்படியான பெண்களையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.)
9. தனது தவறான நடத்தை அல்லது தன்மீதான பாலியல் வன்முறையின் விளைவால் கருத்தரித்த நிலையில் நாடுதிரும்ப நேரும் பெண்கள் எதிர்கொள்ளும் உடலியல்-உளவியல் மற்றும் சமூகச் சிக்கல்கள்.
10. அவ்வாறு பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் பெரியதொரு கேள்விக்குறியாய்த் தொக்கிநிற்றல்.
இப்படி எத்தனையோ வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இவற்றையெல்லாம் நிவர்த்திக்கக்கூடிய தீர்வு முன்மொழிவுகள் எவ்வாறானதாக அமைய முடியும் என்பது குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த மடலில் பார்ப்போம்.
பெண்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வதைத் தவிர்ப்பதற்கான சில தீர்வு முன்மொழிவுகள்
பெண்கள் ஏன் தொழிலுக்காக வெளிநாடு செல்கிறார்கள் என்பதற்கான காரணங்களில் பெரும்பாலானவற்றை வைத்துப் பார்க்கும்போது மிக அடிப்படைக் காரணம் பொருளாதாரப் பிரச்சினையும் அதனை சீர்செய்யாத சமூகத்தின் சீர்கேடான நிலைமையும் தான் என்பது தெளிவாகிறது. இந்த நிலைமையைச் சீர்செய்யும் பெரும் பொறுப்பும் இயலுமையும் நம்முடைய ஊர் பள்ளிவாயிலை மையமாகக் கொண்ட ஊர் ஜமாத், நம்முடைய இஸ்லாமிய இயக்கங்கள் என்பவற்றைச் சார்ந்துள்ளன என்றால் அது மிகையல்ல என்பது என்னுடைய உறுதியான கருத்து.
அ) ஸகாத் பணத்தைச் சரியாகச் சேகரித்து உரியவகையில் பங்கீடு செய்தல்
ஒரு ஊர்ப் பள்ளிவாசலைப் பொறுத்தவரையில் வெறுமனே சந்தா வசூலிப்பது, மையத்தை அடக்கம் செய்ய இடம்கொடுப்பது, நோன்புக் காலத்தில் கஞ்சி பங்கீடு செய்வது, ஹஜ் பெருநாளுக்காக ஊழ்ஹிய்யாவுக்கான குர்பானை பொறுப்பேற்றுப் பங்கிடுவது என்ற அளவில் அதன் பொறுப்பு முற்றுப்பெற்று விடுவதில்லை. மாறாக, அந்த ஊரில் சந்தா செலுத்திவரும் அனைத்துக் குடும்பங்களினதும் நலன் குறித்தும் கரிசனை கொள்ளவேண்டியது அதன் கடமை.
அந்த வகையில், ஊர் ஜமாஅத் 'ஆமிலூன்' எனும் ஜகாத்தை வசூலிக்கும் ஒரு குழுவை பொறுப்பாக நியமித்து ஜகாத்தை மிகச் சரியாக வசூலிப்பதோடு, ஊரில் ஜகாத்தைப் பெற உரித்துடையவர்கள், மிகுந்த தேவை உடையவர்கள் யாவர் என்ற பட்டியலை முன்னுரிமை வழங்கவேண்டிய ஒழுங்கின்படி தயாரித்துக்கொள்ள வேண்டும். அதன்படி, ஏழைகளை வரிசையில் நிறுத்தி ஏதோ கொஞ்சம் அரிசியும் பருப்பும் கையில் பத்தும் இருபதுமாக சில ரூபாய் நோட்டுக்களையும் கொடுப்பதோடு நம் தலை தப்பியது என்று 'எஸ்கேப்' ஆகிவிடாமல், வருடத்துக்கு ஒரு சில குடும்பங்களையாவது முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்து, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை, அதாவது, அதன்பின் அவர்கள் பிறர் தயவை நாடிநிற்காதவாறு ஒரு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வருடந்தோறும் இப்படி தொடர்ந்து செய்துவந்தால், வறுமையைக் காரணம் காட்டி பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்குச் செல்லவேண்டிய அவல நிலை தோன்றாது.
ஆ) பொது நிதியம் ஒன்றை ஸ்தாபித்து உதவுதல்
இதனை இரண்டு அடிப்படையில் மேற்கொள்ளலாம்.
ஒன்று: உதவி என்ற அடிப்படையில்.
மற்றது: வட்டியில்லாக் கடன் என்ற வகையில் தாம் தன்னிறைவு அடைந்தபின் படிப்படியாகத் திருப்பிச்செலுத்தும் அடிப்படையில்.
ஒரு ஊர்ப் பள்ளிவாயிலோ பொதுப் பணியில் ஆர்வமுள்ள இளைஞர் குழுவினரோ முன்னின்று ஒரு உத்தியோகபூர்வ பொதுநிதியம் ஒன்றை பகிரங்கமாக அமைத்துக்கொள்ளல் வேண்டும். ஊரில் உள்ள வயதுவந்த (ஓரளவு வசதியான) குடும்ப அங்கத்தவர்களிடம் இருந்து வாரம் ஐந்து ரூபாய் அல்லது கூடியதோ குறைந்ததோ ஒரு தொகையை நிர்ணயித்து உண்டியல் போன்ற ஓர் ஒழுங்கில் சேகரிக்கும் பணத்தில் இருந்து குறிப்பிட்டளவு பணம் சேர்ந்தபின், ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் பரம ஏழையான குடும்பங்களுக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை ஏற்படுத்திக் கொடுக்கலாம். (கணக்குவழக்குகள் யாவும் மிகக் கவனமாக எழுத்துபூர்வமாகப் பேணப்பட வேண்டியது இங்கு கட்டாய நிபந்தனையாக இருத்தல் வேண்டும்).
உதாரணமாக,
1. தையல், பின்னல் வேலைகள் தெரிந்த பெண்கள் இருக்கும் வீடாக இருந்தால் தையல் இயந்திரமும் துணி, நூல், பெப்ரிக் பெயின்ட் முதலான சாதனங்களைப் பெற்றுக் கொடுக்கலாம்.
2. ஊர்ப் பாடசாலைகளில் வருடாந்தம் மாணவ மாணவிகளுக்கான உடைகளைத் தைக்கும் ஆர்டரை இந்தப் பெண்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். அவ்வாறே, நகர்ப்புற காமண்ட் தொழிற்சாலைகளில் இருந்து துணியை வீட்டுக்குக் கொண்டுவந்து தைத்துக் கொடுக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கலாம்.
3. தையல் பயிற்சி வழங்கக்கூடிய பயிற்சிமையம் ஒன்றை நடாத்தக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதன்போது தையல் தெரிந்த பல பெண்களுக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முடியும். அதேபோல் இம்முயற்சியால், சிறிய காமண்ட் தொழிற்சாலை ஒன்றைக்கூட ஏற்படுத்தும் வாய்ப்பு எதிர்காலத்தில் தோன்ற இடமுண்டு.
4. பலவகையான சமையல்களில் தேர்ந்த பெண்கள் இருக்கும் பட்சத்தில் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகளுக்குத் தேவையான உணவுப் பண்டங்களைத் தயாரித்து விற்பதற்கான சாதனங்களை, வசதிகளைச் செய்து கொடுக்கலாம். திருமணம் மற்றும் பிற வைபவங்களுக்குத் தேவையான உணவுகளை வழங்கும் வகையில் கேட்டரிங் சேர்விஸ் நடாத்த உதவலாம்.
5. வீட்டோடு கொஞ்சம் நிலமும் தண்ணீர் வசதியும் உள்ள பெண்களுக்கு வீட்டுத் தோட்டம் ஒன்றைச் செய்யக்கூடிய வசதிகளைச் செய்து கொடுக்கலாம்.
6. கோழி, ஆட்டுப் பண்ணைகளை சிறிய அளவில் செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
7. பேப்பர் பேக் ஒட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல் முதலான திறன் வாய்ந்த பெண்களுக்கு அதற்கான சாதனங்களை, வசதிகளை வழங்கலாம்.
8. கம்பியூட்டர் கல்வியுள்ள பெண்களுக்கு சிறார்களுக்கு கம்பியூட்டர் டியுஷன் கொடுக்கக்கூடிய வசதி செய்து கொடுக்கலாம். அவ்வாறே, ப்ளஸ் டூ வரை படித்த பெண்களுக்கு டியூட்டரி மூலம் டியூஷன் கொடுக்கக்கூடிய ஏற்பாடுகளை (உரிய கொட்டகை, மேசை, கதிரை, இத்யாதி வசதிகள்) செய்து கொடுக்கலாம்.
9. சிறுவருக்கான இஸ்லாமிய பாலர் பாடசாலை, குர்ஆன் மத்ரஸா என்பவற்றை ஸ்தாபித்து கல்வியும் ஆற்றலும் உள்ள பெண்கள் பணிபுரியும் வகை செய்யலாம்.
10. இவை எதுவுமே சரிவராத ஒரு நிலைதான் காணப்படும் என்றால், ஏழைப் பெண்களுக்கான சுயதொழில் கல்வியைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய ஒரு பயிற்சி மையத்தை இனியாவது ஒழுங்குசெய்து, அதன் மூலம் எதிர்காலத்தில் நம் பெண்கள் தன்னம்பிக்கையோடும் சுயகௌரவத்தோடும் வாழக்கூடிய வாய்ப்பையாவது ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
11.எல்லாவற்றையும் விட, வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய வகையில் சிறந்த கல்வியை நம் பெண்களுக்கு வழங்குவதற்கு நாம் யாருமே பின்னின்று விடக்கூடாது.
'வறுமையானது குப்ரை நெருங்கச் செய்துவிடும்' என்பது நம்முடைய கண்மணி நபியின் எச்சரிக்கை. எனவே, அந்த வறுமையைப் போக்கி, ஏழைக் குடும்பங்கள் குறிப்பாக ஏழைப் பெண்கள் தன்னிறைவு பெற்று வாழும் வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நேர்த்தியான ஒரு வேலைத்திட்டத்தை வகுத்து நாம் செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.
ஏற்கெனவே ஒரு கட்டுரையில் நான் எழுதியிருந்தது போல, உள்நாட்டிலும் வெளிநாட்டில் வாழும் வசதியுள்ள சகோதரர்கள் ஒன்றுசேர்ந்து மனம் வைத்தால் தத்தமது ஊரில் வருமானம் தரக்கூடிய ஒரு கட்டிடத்தையோ கடைத்தொகுதியையோ கட்டி வாடகை வருமானத்தை இதன்பொருட்டு வக்பு செய்துவிட்டால், இது நடக்கவே முடியாத கற்பனையல்ல என்பதை இன்ஷா அல்லாஹ் காலம் அவர்களுக்கு உணர்த்தும்.
பொது நிதியத்துக்கான நிதியீட்டத்தின் பொருட்டு வேறுசில ஆலோசனைகள்:
1. கட்சிக்கூட்டம், இயக்கரீதியான கூட்டம் என்பவை கோலாகலமாக நடைபெறுவதற்காகச் செலவிடும் பணத்தை அல்லது அதில் ஒரு பகுதியை இதன் பொருட்டு வழங்கலாம்.
2. ஆடம்பரமான திருமண விழாக்களை பிற வைபவங்களை எளிமையாக நடத்திவிட்டு அதற்கான பணத்தை இந்த நிதியத்துக்கு வழங்கலாம்.
3. கௌரவமாக உழைத்துச் சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் தமது மாத, நாள் வருமானத்தில் ஒரு சிறுதொகையைத் தவறாமல் இந்த நிதியத்துக்கு வழங்கி வரலாம்.
4. பிறநாட்டு, பிற நிறுவனங்களின் நன்கொடைகளைப் பெற்று வழங்கக்கூடிய ஏற்பாடுகளைச் செய்ய முனையலாம்.
5. அரசாங்கத்தின் சுயதொழில் உதவித்திட்டத்தின்கீழ் பயன்பெறும் ஏற்பாடுகளை வழங்கி உதவலாம்.
இ) சீதனப் பிரச்சினையை ஒழித்துக்கட்டுதல்
சீதனம் எடுப்பதையும் கொடுப்பதையும் ஒழித்துக்கட்டும் போராட்டத்தை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும். இந்த சீர்கேடு ஒழிந்தால், சமூகத்தில் நிறையப் பிரச்சினைகள் தீரும் என்பது உறுதி.
என்ன செய்யலாம்?
1. சீதனம் எடுப்பதும் கொடுப்பதும் வட்டியைப் போலவே ஹராம் என்பதை உணர்த்தும் பிரசாரங்களை வலுவாக முன்னெடுத்தல்.
2. சீதனம் வாங்கி நடக்கும் கல்யாணம் என்றால், அது குடும்பக் கல்யாணமே என்றாலும் அதில் பங்குகொள்வதை முற்றாகப் புறக்கணித்தல்.
3. அதனை பகிரங்கமாக அறிவித்து, சீதனம் என்ற பேச்சு வந்தாலே வெட்கக்கேடு, கேவலம், அவமானம் என்பதான மனப்பதிவு மக்கள் மத்தியில் தோன்றுமாறு செய்தல்.
4. குத்பாப் பிரசங்கங்களில் சீதனத்தின் இழிவு குறித்து அடிக்கடி பேசப்படுமாறு பார்த்துக் கொள்ளுதல்.
(அதுசரி, பெற்றோர் சீதனம் வாங்குமாறு நிர்ப்பந்திக்கும் பட்சத்தில் என்ன செய்வது? வேறென்ன, 'அப்படியா? அப்போ எனக்குக் கல்யாணமே வேண்டாம்' என்ற பதிலுக்கு மிரட்டினால் போச்சு! என்ன, சரிதானா சகோதரர்களே? . அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமான விடயத்தில் பெற்றோருக்குக் கீழ்படிய வேண்டியதில்லை அல்லவா?)
ஏதோ, என் சிற்றறிவுக்கு எட்டிய சில ஆலோசனைகளை முன்வைத்துவிட்டேன். அவை குறித்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
Anonymous said...
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள உலமா சபைகள் அங்குள்ள பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வேளைவாய்ப்பு நிருவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டு வேளைவாய்ப்புக்களை இல்லாது செய்யலாம்.
அதற்கு பதிலாக உள்ளூர் சிறு கைத் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கலாம். நன்றி அமீர்
shifa said...
பெண்கள் வாழ்வியல் வருமானத்திற்காக மஹ்ரம் இல்லாமல் வெளிநாடு சென்று வேலை செய்வது தடுக்கப் பட வேண்டும்.
என் மனதில் பட்ட சில தீர்வுகளை எழுதுகிறேன்.
I. ஒவ்வரு கிராமங்களிலும் صندوق الزكاة و صندوق النكاح உருவாக்கலாம். இதன் முலம் எமது பெண்களுக்கு உதவலாம்.
II. உள்ளூர்களிலே சில கை தொழில் நிறுவனக்களை உருவாக்கலாம்.
III. எமது பெண்கள் உள்ளூர்களில் சிறு சிறு வேலைகளை செயவதை வெட்கமாக கருதுகின்றார்கள். மேலும் வெளிநாடு சென்று மார்க்கத்தையும், மானத்தையும் இழந்து நின்று ஊருக்கு பெருமையாய் பணம் அனுப்பும் கவலையான நிலையை எமது பெண்களுக்கு உணர்த்த வேண்டும்.
IV. பணக்காரர்கள் அவர்களிடம் உள்ள மேலதிக சொத்து எலை யுடையது எண்பதை உணர்ந்து செயட்பட வேண்டும்.
இதனை நாம் எம் மனதில் பதித்து எமது பெண்களுக்கு உதவி செய்வோம்.
جزاك الله خير الجزاء
இங்கு பதியப்பட்ட ஆலோசனைகளை எமது கிராமங்களில் உயிரூட்டுவதற்கு நாம் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.
அண்மைகாலமாக பேசப்பட்டு வரும் ஒரு பெண்ணின் வெளீநாட்டு வாழ்க்கை பற்றியும் அந்த பெண்ணின் இன்றைய நிலை பற்றியும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் மிகச் சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ள ஒரு துண்டுப் பிரசுரம் இந்த நேரத்தில் பிரயோசனமானதாகும்.
‘மாற்றங்கள் தேவை’ தனது பணியை கருத்துப் பரிமாற்றத்துடன் நிருத்திக் கொள்ளாமல் எமது பெண்களில் விடியல் குறித்து ஒரு மடலை இலங்கையின் தற்போதைய கைத் தொழில் அமைச்சருக்கு ஒரு கடிதத்தையும் வழங்கி உள்ளது.
இன்ஷா அல்லாஹ், கெளரவ அமைச்சர் தன்னுடைய அமைச்சுக்குற்பட்டு எமது பெண்களுக்கு செய்யமுடியுமான விடயங்களை நடைமுறைப்படுத்த அவருக்காக நாம் பிரார்த்திப்பதுடன், பெண்களின் உரிமைகள், சுந்தந்திரங்கள் தொடர்பாக பேசுகின்ற, குரல் கொடுக்கின்ற அமைப்புக்களும் தங்கள் பணியை துரிதமாக முன்னெடுக்க மிகத் தயவாய் வேண்டி நிற்கின்றோம்.
இங்கு சொன்னது தவிர இன்னும் சொல்ல வேண்டிய செய்திகளை உங்களிலிருந்து எதிர்பார்த்தவர்களாக…….
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
5 comments:
جزاك الله
in-sha allah we will get possible solution for this problem.
Assalamu alaikkum var,I have one idea ragarding this issue.We can arrange one trust .Each and every muslims haveto join a member and we can help for all.
@Anonymous
Wa alaikkum wassalam warahmathullah,
Masha allah, it should be created and we of us join together.
regards
@Shifa
insha allah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
சகோதரி லரீனாவுக்கு வாழ்த்துகள்! சிறந்த ஒரு கட்டுரையை கொடுத்துள்ளார், நல்ல கருத்துகளோடு அதற்கான நடவடிக்கையும் சேர்த்து கொடுத்துள்ளார். இதை படிக்கும் புதிதாக வெளிநாட்டுக்கு வர விரும்பும் பெண்களுக்கு முன்னெச்சரிக்கையாகவும் அதோடு சொந்த நாட்டில் இருந்தே சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுடைய மனதில் ஏற்படுத்த ஏதுவாக அமையும்.
தங்களுடைய பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
Post a Comment