மொட்டுக்கள் மலர…….. தொடர் 04



(8) எல்லாவிடயத்திலும் எல்லை மீறலைத் தவிர்ந்து கொள்ளுதல். (Avoid Pampering)
பிள்ளைகளின் தன்னம்பிக்கையை நல்ல முறையில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுடன் எல்லைமீறிய அன்பை வளர்த்து விடக் கூடாது. அந்த எல்லை மீறிய அன்பு அவர்களை அறியாமலே உணர்ச்சிவசப்பட்டு எல்லா விடயத்திலும் பலகீனமானவர்களாகவும் எதற்கும் எம்மிலேயே தங்கி நிற்பவர்களாகவும் மாற்றிவிடும்.

(9) உண்மைச் செய்திகளை கூறி படிப்பினை பெறச் செய்தல், ( Remember the real histories)
எமது பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு உலகில் வாழ்ந்து மரணித்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கின்ற வரலாற்று கதாநாயகர்களின் வரலாற்றுப் படிப்பினைகளையும் முன்மாதிரியான சம்பவங்களையும் சொல்லிக் கொடுக்கலாம்.

சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட அவர்களின் தன்னம்பிக்கையும் உறுதிமனப் பாண்மையையும் உண்டுபண்ணக் கூடிய கதைதான் கீழ் வரும் செய்தி:

முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

“உங்களுக்கு முன்னால் வந்தவர்களில் ஒரு அரசனும் அவனுடைய மந்திரவாதியும் இருந்தனர். அந்த மந்திரவாதி வயது முதிர்ந்த போது அரசனிடம்,
”நான் வயதானவனாகி விட்டேன்; என்னுடைய காலம் முடியப் போகிறது; ஆகையால் ஒரு சிறுவனை அனுப்பினால் அவனுக்கு மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன்” என்று கூறினான். அவ்வாறே அரசனும் மந்திரவாதியிடம் ஒரு சிறுவனை அனுப்பினான்; மந்திரவாதியும் அவனது சூனியத்தை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.

எப்பொழுதெல்லாம் அந்த சிறுவன் மந்திரவாதியிடம் செல்கிறானோ அப்போதெல்லாம் வழியில் உள்ள ஒரு துறவியைச் சந்தித்து அவர் சொல்வதைக் கேட்டு அதில் கவரப்பட்டான். இவ்வாறு துறவியை தினமும் சந்தித்துவிட்டு பிறகு தாமதமாக மந்திரவாதியிடம் செல்வதால் அவர் அந்த சிறுவனை அடிக்கலானார். இதைப்பற்றி அந்த சிறுவன் துறவியிடம் கூறிய போது “நீ அந்த மந்திரவாதியைப் பற்றி பயப்படும்போதெல்லாம் ‘என் வீட்டார்கள் மூலம் எனக்கு அதிக வேலை தருவதனால் தாமதமாகி விட்டது’ என்றும், உன்னுடைய வீட்டாரிடம் நீ பயப்படும்போதெல்லாம் ‘மந்திரவாதியால் தாமதமாகி விட்டது’ என்றும் சொல்லிவிடு” என்று கூறினார். இவ்வாறே அந்த சிறுவனும் சில நாட்கள் செய்து கொண்டு இருந்தான்.
ஒரு நாள் பெரிய விலங்கு ஒன்று பாதையில் அமர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அதைக் கடந்து செல்ல இயலாதிருந்தனர். அப்போது அந்தச் சிறுவன் இன்று அந்த மந்திரவாதி சிறந்தவரா? அல்லது துறவி சிறந்தவரா? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து, ஒரு கல்லை எடுத்து கூறினான், “இறைவனே மந்திரவாதியின் செயல்களை விட துறவியின் செயல் உனக்கு விருப்பமானதாக இருந்தால் இந்த விலங்கைக் கொன்று விடு! இதன் மூலம் மக்கள் இந்த பாதையில் நடக்க ஏதுவாக இருக்கும்” (என்று கூறி) பிறகு கல்லால் எறிந்து அதை கொன்று விட்டான். மக்களும் அந்த பாதை வழியே கடந்து சென்றனர்.

அந்தச் சிறுவன் துறவியிடம் நடந்தவற்றை விளக்கிய போது அவர் “என்னுடைய மகனே! இன்று நீ என்னை விட சிறந்தவனாகிவிட்டாய்! நான் நினைத்ததை நீ அடைந்து விட்டாய்! நீ சோதனைக்கு உட்படுத்தப்படுவாய்! அப்படி சோதனைக்குள்ளாக்கப் படும் போது என்னைப் பற்றி அவர்களிடம் தெரியப்படுத்த வேண்டாம்” என்று கூறினார்.

அந்தச் சிறுவன் பிறவிக் குருடர்களையும் தொழுநோயாளிகளையும் மற்ற நோய்களையும் நிவர்த்தி செய்து வந்தான். ஒரு முறை அரசவையில் உள்ள ஒரு அறிஞர் குருடராக ஆகியிருந்தார். (அந்த சிறுவனைப் பற்றிக் கேள்வியுற்ற அவர்) அந்தச் சிறுவனுக்கு நிறைய அன்பளிப்புகளை கொண்டு வந்து “நீ என் நோயை குணப்படுத்துவதற்காக இந்த அன்பளிப்புகளைக் கொண்டு வந்தேன்” என்று கூறினார். பிறகு அந்தச் சிறுவன் “நான் யாரையும் குணப்படுத்துவதில்லை! அல்லாஹ்தான் மக்களை குணப்படுத்துகிறான்; ஆகையால் அல்லாஹ்வை நம்பி அவனிடம் பிரார்த்தனை செய்! அல்லாஹ் குணப்படுத்துவான்” என்று கூறினான். அவ்வாறே (அந்த குருடர்) அல்லாஹ்வை நம்பி பிரார்த்தனை செய்தபோது, அல்லாஹ் அவருடைய நோயைக் குணமாக்கினான்.

பின்னர் அந்த அறிஞர் அரசவைக்கு வந்து தாம் வழமையாக அமரும் இடத்தில் அமர்ந்த போது, “உனக்கு பார்வையை தந்தது யார்?” என்று (அரசன்) கேட்டான். “என்னுடைய இறைவன்” என்று (அவர்) சொன்ன போது, “இல்லை! நான் கொடுத்தேன்” என்று அரசன் கூறினான்.
பிறகு அந்த மனிதர், “இல்லை! என்னுடைய மற்றும் உன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்” என்று சொன்ன போது “என்னை தவிர வேறு இறைவன் இருக்கிறானா?” என்று அரசன் கேட்டான். பிறகு அந்த மனிதர் “ஆம் உன்னுடைய மற்றும் என்னுடைய இறைவன் அல்லாஹ்” என்று கூறினார். (பிறகு) அந்த அரசன், அந்த சிறுவனைப் பற்றிய உண்மையை சொல்லும் வரை அந்த மனிதரை சித்திரவதை செய்தான். ஆகையால் அந்த சிறுவன் அரசனுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டபோது அரசன் கேட்டான், “ஒ சிறுவனே! நீ பிறவிக் குருடர்களையும், தொழுநோய்க்காரர்களையும், மற்ற நோய்களையும் குணப்படுத்தும் அளவுக்கு மந்திரக்கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டாயா?” என்று கேட்டான். அந்த சிறுவன் “நான் யாரையும் குணப்படுத்தவில்லை; அல்லாஹ் தான் குணப்படுத்துகிறான்” என்று சொன்னான்.

அரசன் கேட்டான், ‘நான்?’. சிறுவன் பதிலளித்தான், ‘இல்லை! அல்லாஹ்.’
“என்னைத்தவிர வேறு இறைவன் உண்டா? என்று அரசன் கேட்ட போது, “என்னுடைய இறைவனும் உன்னுடைய இறைவனும் அல்லாஹ்” என்று (சிறுவன்) கூறினான்.
பிறகு துறவியைப்பற்றி சொல்லும்வரை அந்த சிறுவன் துன்புறுத்தப்பட்டான். பிறகு அந்த துறவி அரசன் முன்பு கொண்டு வரப்பட்டு அவருடைய மார்க்கத்தை விட்டு விடும்படி கட்டளை இடப்பட்டார். துறவி மறுத்தபோது ஒரு ரம்பம் கொண்டுவரப்பட்டு துறவியின் தலை நடுவில் வைத்து இரண்டாக அறுக்கப்பட்டார்.

பிறகு அந்த குருடராயிருந்த அந்த அறிஞர் கொண்டு வரப்பட்டு அவருடைய மார்க்கத்தை விட்டு விடும்படி கட்டளை இடப்பட்டபோது அவரும் மறுத்துவிட்டார். அவருடைய தலையின் மையப் பகுதியில் அந்த ரம்பத்தை வைத்து இரண்டாக அறுக்கப்பட்டு கொல்லப் பட்டார்.
பிறகு அந்த சிறுவன் கொண்டு வரப்பட்டு அவனிடம் அவனுடைய மார்க்கத்தை விட்டு விடும்படி கேட்ட போது அவனும் மறுத்துவிட்டான். ஆகையால் அரசன் அந்த சிறுவனை சிலருடன் இன்னின்ன மலை உச்சிக்கு அனுப்பினான். (அனுப்புவதற்கு முன்) அவர்களிடம் “அந்த சிறுவனுடன் மலை உச்சிக்கு ஏறுங்கள். உச்சியை அடைந்தவுடன், அந்தச் சிறுவன் தன்னுடைய மார்க்கத்தை விட்டுவிடுகிறானா என்று பாருங்கள்! இல்லையென்றால் மலை உச்சியிலிருந்து அவனை எறிந்து விடுங்கள்’ என்று கூறினான். அவ்வாறே அவர்கள் அந்தச் சிறுவனை மலை உச்சிக்கு எடுத்து சென்ற போது அந்த சிறுவன் தன் இறைவனிடம் “நீ விரும்பக்கூடிய எந்த வழியிலாவது என்னை காப்பாற்று” என்று கேட்டான். பிறகு அந்த மலை உலுக்கப்பட்டது. அந்தச் சிறுவனுடன் வந்தவர்கள் இறந்து விட்டனர்.
அந்தச் சிறுவன் அரசனிடம் வந்தபோது “உன்னுடன் வந்தவர்களை என்ன செய்தாய்?” என்று கேட்டான். அந்தச் சிறுவன் “அல்லாஹ் அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினான்” என்று (அந்த சிறுவன்) கூறினான்.

பிறகு சிலருடன் அந்த சிறுவனை ஒரு படகில் கடலில் நடுபகுதிக்கு அனுப்பி “அவனுடைய மார்க்கத்தை விட்டு விட கூறுங்கள்!! இல்லை எனில் கடலில் தள்ளி அவனை மூழ்கடித்துவிடுங்கள்” என்று கூறினான். அந்த சிறுவனை கடலுக்குள் எடுத்துச் சென்ற போது “ஓ இறைவனே இவர்களிடமிருந்து நீ விரும்பக்கூடிய எந்த வழியிலாவது என்னை காப்பாற்று” என்று வேண்டினான். அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்து விட்டனர்.
அந்த சிறுவன் அரசனிடம் வந்த போது “உன்னுடன் வந்தவர்கள் உன்னை என்ன செய்தார்கள்?” என்று அரசன் கேட்டான். “அல்லாஹ் அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினான்” என்று (அந்தச் சிறுவன்) கூறினான்.
பிறகு அந்தச் சிறுவன் “நான் கூறுகிற வழியில் தவிர வேறு எந்த வழியிலும் உன்னால் என்னை கொல்ல முடியாது” என்று சொன்னான்.
“அது என்ன வழி?” என்று அரசன் கேட்டான்.
(அதற்கு அந்த சிறுவன்) “ஒரு உயர்ந்த இடத்தில் மக்களை ஒன்று சேர்த்து என்னை ஒரு மரத்தின் கிளையில் வைத்து கட்டிவிட்டு! என்னுடைய வில்லில் இருந்து ஒரு அம்பை எடுத்து, ”இந்தச் சிறுவனின் இறைவனாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று சொல்லி அம்பை எறிந்தால் நீ என்னைக் கொல்ல முடியும்” (என்று கூறினான்).
அரசனும் அவ்வாறே ஏற்பாடு செய்து அம்பை எடுத்து வில்லில் வைத்து “இந்த சிறுவனின் இறைவனாகிய அல்லாஹ்வின் பெயரால்” என்று சொல்லி எறிந்தான். அது அவனுடைய நெற்றிப் பொட்டில் பாய்ந்து அந்தச் சிறுவன் தன்னுடைய நெற்றி பொட்டில் காயத்தின் மீது கையை வைத்தவாறே இறந்து விட்டான்.
உடனே மக்கள் ‘நாங்கள் அந்த சிறுவனின் இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறோம்’என்று பிரகடனப்படுத்தினார்கள். அந்த அரசனிடம் “நீ எதைப்பற்றி பயந்தாயோ அது நடந்துவிட்டது” என்றும் கூறப்பட்டது. இறைவன் மீது ஆணையாக அனைவருமே (அந்த சிறுவனின் இறைவனை) நம்பிக்கை கொண்டு விட்டனர்.
பிறகு அரசன் “ஒவ்வொரு பாதையின் நுழைவாயிலும் அகழியை வெட்டி அதில் நெருப்புகளை எரிய விடுங்கள்” என ஆணையிட்டான். அவ்வாறே செய்யப்பட்டது.பிறகு அந்த அரசன் யாரெல்லாம் அந்த சிறுவனின் மார்க்கத்தை விட்டு விடுகிறார்களோ அவர்களை விட்டுவிடுங்கள்; யாரெல்லாம் மறுத்து விடுகிறார்களோ அவர்களை நெருப்பில் எறிந்து விடுங்கள்” என்று கூறினான்.
அவ்வாறு அந்த மக்கள் நெருப்புக் குண்டத்தில் வேதனை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட போது, ஒரு தாய் தன் பால்குடி குழந்தையுடன் நெருப்பை அடைந்து அதில் விழ சிறிது தடுமாற்றமடைந்த போது அந்த கைக்குழந்தை “பொறுமையை கடைபிடி! நிச்சயமாக நீ உண்மையான மார்க்கத்தை பின்பற்றுகிறாய்!” என்று கூறியது.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

இந்த ஹதீஸை தப்ஸீர் இப்னு கதீரில் மிக விரிவாக பார்க்கமுடியும்.
இந்த ஹதீஸின் மூலம் அந்தச் சிறுவனின் துணிச்சலையும் தன்னம்பிக்கையும் எமது சிறுவர்களுக்கு முன்மாதிரியாகச் சொல்லிக் கொடுக்கலாம்.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

 பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்: (Help Children to improve Their Studies)
எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களிடத்தில் படிப்பதற்கு முன்னர், அதேநேரம் பாடசாலை வாழ்வை தொடர்ந்ததன் பின்னரும் அந்தக் காலத்தை வெற்றிகரமான, ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தேவை ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உண்டு.

ஒவ்வொரு பிள்ளைகளையும் நல்ல கல்வியறிவுடையவர்களாகவும் உலகில் நன்னடத்தையுடையவர்களாகவும் வாழ்ந்து மரணிக்க அவர்களுக்கு பெற்றோர்களாகிய நாம் உதவ வேண்டும்.

“முஃமினான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கல்வி கற்பது கடமையாகும்”
“ஒரு பிள்ளை கல்விப் பாதையில் சென்றால் அந்த பிள்ளை சுவர்க்கத்தின் பாதையில் இருக்கின்றது” என்ற ஹதீஸுகளின் அடுப்படையில் நாம் எமது பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்கு சில வழிமுறைகளை நான் கீழே அடையாளப்படுத்தியிருக்கின்றேன்.

1. நல்ல ஆரம்பத்தை உருவாக்கிக் கொடுத்தல், (Give them a Good Start)
எப்போதும் வளர்ந்தவர்களை விட சிறியவர்கள் எதையும் மனனமிடுவதில் விவேகமானவர்கள், சொல்லிக் கொடுக்கும் பாடங்களை அவசரமாக மனதில் பதித்துக் கொள்வதில் அதி சக்தி வாய்ந்தவர்கள். குறிப்பாக 5 வயதிற்குற்பட்டவர்கள் இதில் அதி உசார். அதனால் இவர்களுக்கு கீழ் வரும் சில நுட்பகரமான தந்திரோபாயங்களைக் கொண்டு நல்ல ஆரம்பத்தைக் கொடுக்க முடியும்.

• அல் குர்ஆனில் இடம் பெறுகின்ற சிறிய அத்தியாயங்களைச் சொல்லிக் கொடுத்து அதனை மனனமிடச் சொல்லலாம், மொத்த அத்தியாயங்களின் பெயர்களை மனனமிட கற்றுக் கொடுக்கலாம், இது இவர்களின் மனத்திறனை அதிகரிக்க உதவும்.

• புத்தகத்தில் இடம்பெறுகின்ற கதைகளைச் சத்தமாக வாசித்துக் காட்டவேண்டும், இது அவர்களின் வாசிப்புத் திறைமையை அதிகரிக்க செய்வதுடன் அவர்களின் கற்பனைத் திறமையையும் ஊகிப்புத் தன்மையையும் அதிகரிக்க உதவும்.

• எமது பிள்ளைகளுடன் அதிகமாக பேச வேண்டும், இது அவர்களின் மொழி அறிவை அதிகரிக்க செய்யும்.

• அமைதியான சூழலில் அவர்களை நல்ல நல்ல சிறிய பாடல்களைச் சொல்லிக் கொடுத்து அதனை திரும்பப் பாடச் சொல்லலாம். சில முக்கியமான கருத்தாளமிக்க கவிவரிகளை மனனமிடச் செய்யலாம், இது அவர்களின் மனனசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

• எமது சூழலில் கிடைக்கின்ற பொருட்களை கையில் எடுத்து அதனைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம்,

வீட்டுத்தோட்டத்தில் பூத்திருக்கும் பூ ஒன்றைக் கையில் எடுத்து அதன் பெயர், அதன் தன்மை, அதன் பிரயோசனங்கள் போன்ற விடயங்களைச் சொல்லிக் கொடுக்கலாம், அதனை இரசிக்கச் சொல்லிக் கொடுக்கலாம். இது இவர்களின் சூழல் தொடர்பான அறிவை அதிகரிக்கச் செய்யும்.

• எப்போதும் பிள்ளைகளின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கொடுக்க வேண்டும். தெரியாத விடயங்களை அவர்களுடன் சேர்ந்து தேடி கண்டுபிடிக்கலாம்.
இந்த முறைகளைக் கடைப்பிடிக்கும் போது எமது பிள்ளைகளின் அறிவுத்திறனையும் கற்பனைத்திறனையும் அதிகரிக்கச் செய்ய உதவும்.

2. வீட்டில் ஒரு நூலகத்தை உருவாக்குதல், (Make a Good Library in Home)
தொடரான வாசிப்பு வழக்கமும் தேடல் கற்கை முறையும் பிள்ளைகளின் நடத்தைகளிலும் கல்வி முன்னேற்றத்திலும் அதிக செல்வாக்கைச் செலுத்தும்.

அதே நேரம் பெற்றோர்கள் எப்போது பிள்ளைகளுக்கு முன்னால் வாசிக்கும் பழக்கத்தை உண்டுபண்கின்றார்களோ அப்போது வாசிப்பதில் பிள்ளைகளின் ஆசையையும் ஊக்கத்தையும் மிக சுலபமாக ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும்.
அதனால் எமது வீடுகளில் நூலகங்களை உருவாக்குவதற்கு மறந்து விடாதீர்கள், அவைகளைப் பிள்ளைகள் அதிகமாகப் பாவிக்கும் விதத்திலும் அவர்களின் பார்வைக்கு அதிகமாக கவரும் வித்த்திலும் அமைக்க வேண்டும்.

நாம் எமது பிள்ளைகளுக்கு முன்னால் ஒரு புத்தகத்தின் சில பக்கங்களை வாசிக்க ஆரம்பித்தால் மீதியை எமது பிள்ளைகள் தீர்த்து வைப்பார்கள்.

கல்வி எமது சமூகத்தின் நிலையான சொத்து என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

3. பாடசாலை வாழ்வை விளையாட்டுடனும் சந்தோஷத்துடனும் தொடர்புபடுத்தி சிந்திக்கச் செய்தல், (Link School with Fun and Enjoyment)
பாடசாலைக்கு போகுதல் என்பது எமது பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்காத அல்லது கசப்பான ஒரு விடயம். அப்படிப்பட்டவர்களை தினமும் சுயவிருப்பத்துடன் பாடசாலைக்கு அனுப்புவதற்கு, அதன் பால் தூண்டுவதற்கு நாம் தெரிந்திருக்க வேண்டும்.

நாம் பிள்ளைகளுடன் இருக்கும் போது பாடசாலையில் இன்று என்ன படித்தாய்? அல்லது இன்று என்ன வீட்டு வேலை தந்திருக்கிறார்கள்? என்று சாதாரணமாகக் கேட்பதைவிட “இன்று உங்கள் பாடசாலையில் விஷேசமாக என்ன நடந்தது?” “என்ன மகிழ்ச்சியான, வேடிக்கையான நிகழ்ச்சி நடந்தது?”
“உனது நண்பர்களுடன் என்ன விளையாட்டுக்களை விளையாடினீர்கள்?” என்று பேச்சுக்களை வித்தியாசமாக ஆரம்பிக்கலாம்.

இந்த புதுமையான முறை, எமது பிள்ளைகளைப் பாடசாலை தொடர்ப்பாக விழிப்புணர்வையும் விருப்பமாக சிந்திக்கவும் செய்யும்.

இப்படிப்பட்ட கேள்விகள் எமது பிள்ளைகளின் உள்ளங்களில் பாடசாலை தொடர்பாக கறைபடிந்துள்ள தப்பெண்ணங்களும் பாடசாலையென்றால் வெறும் வழமையான ஆசிரியர்களும் அதே வழமையான பாடப் புத்தகங்களும் பாடங்களும் என்றில்லாமல் நண்பர்களுடன் பெறுகின்ற மகிழ்ச்சிகளும் விளையாட்டுக்கள் மூலம் கிடைக்கின்ற மன சந்தோஷங்களும் சேர்ந்தது என்று சிந்திக்கச் செய்யும்.
இதற்கு பின்னும் எமது பிள்ளைகள் பாடசாலைக்கு போக மறுத்தால் பாடசாலைக்கு சென்று அது தொடர்பாக விசாரிப்பதற்கும் இந்த குறிப்பிட்ட மாணவனின் வகுப்பாசிரியரைச் சந்தித்து கலந்துரையாடுவதும் மிக முக்கியமானதாகும். (சில நேரம் சக மாணவர்களின் கொடுமை அல்லது குறித்த பாடங்கள் தொடர்பாக, குறித்த ஆசிரியர் தொடர்பாக விருப்பமற்ற தன்மை போன்றன மாணவர்களுக்கு பாடசாலை தொடர்பான கசப்புணர்வை உருவாக்கலாம்).

மலர்வது தொடர் ஜந்து…………


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: