மொட்டுக்கள் மலர…….. தொடர் 06



8 பிள்ளைகளை எதிலும் ஆர்வமுடையவர்களாக மாற்றுதல், (Encourage Your Children to be Curios)


பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிக்க வேண்டும், எமக்கு தெரியாத போது எமது பிள்ளைகளுடன் சேர்ந்து அதனை தேட வேண்டும், அதற்காக நூலகப் புத்தகங்களை பயன்படுத்துவதையும் அதில் கிடைக்காத போது இணையத்தளங்களில் தேடுவதற்கும் உதவ, வழிகாட்ட வேண்டும்.

உரிய விடயங்களை சிந்திப்பதற்கும் அது தொடர்பாக தேடுவதற்கும் அவர்களின் சிந்தனைகளைத் தூண்ட வேண்டும்

இந்த முறை கல்வியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும். இது புதிய தகவல்களை தேடுவதற்கான இரகசியத்தையும் வழியையும் காட்டிக்கொடுக்க உதவும். இதன் மூலம் எமது பிள்ளைகள் அதிக பயனடைவதுடன் கற்பதில் உண்மையான சந்தோஷத்தையும் கண்டு கொள்ளவும் உதவும்.

9 பாடசாலைப் பாடத்திட்டங்களை அன்றாட நடத்தைகளுடன் தொடர்புபடுத்திக் காட்டுதல், (Connect school syllabus with Day to Day Life)

எமது சூழலில் நாம் காணுகின்ற, பயன்படுத்துகின்ற அல்லது வெளிப் பயணங்கள் மேற்கொள்கின்ற போது நாம் புதிதாக தரிசிக்கின்ற இடங்களை எமது பிள்ளைகளின் பாடப் புத்தகத்துடன் தொடர்புபடுத்தி விளங்கப்படுத்துவது அவர்களின் உள்ளங்களில் இலேசாக பதிய உதவுவதுடன் பாடப் புத்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விரும்பிப் படிக்கின்ற தன்மையையும் உண்டுபன்னும்.

இரவில் வானத்தை நோக்கி எமது தலையை உயர்த்தி பார்க்கின்ற போது எமது கண்களைக் கவரச் செய்கின்ற நட்சத்திரங்களைக் காண்கின்ற போது பிள்ளைகளின் இஸ்லாம் புத்தகத்தில் அல்லது விஞ்ஞானப் புத்தகத்தில் இடம்பெறுகின்ற நட்சத்திரங்கள் தொடர்பாகவும் அதனை படைத்த, வணங்கத்தகுதியான அல்லாஹ் பற்றியும் அவனது பிற படைப்புக்கள் பற்றியும் சொல்லிக் கொடுக்கலாம்.
அநுராதபுரத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொள்கின்ற போது சீகிரிய மலையை தரிசிக்கின்ற போது சமூகக் கல்வி வரலாறுப் புத்தகத்தில் வருகின்ற மன்னர் காசியப்பன் தொடர்பாகவும் அவரது வரலாறு தொடர்பாகவும் விளங்கப் படுத்தலாம்.

இந்த செயற்பாட்டு முறைமை எமது பிள்ளைகளுக்கு அவர்களின் கல்வி தொடர்பான நிஜத்தன்மையையும் யதார்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் உணரச்செய்கின்றது.

1. ஒளிமயமான எதிர்காலத்தைக் காண்பித்தல், (Give them the Edge)
வருடத்திற்கு வருடம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பரீட்சையில் கலந்து கொண்டு சித்தியடைந்து அடுத்த கட்ட எல்லையை அடைய முயற்சிக்கின்றார்கள். ஆனால் கடுமையான போட்டிப் பரீட்சைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தயக்கமின்றி முகங்கொடுப்பதற்கு எமது
பிள்ளைகளைத் தயார்படுத்த வேண்டும், அதற்கு முன் ஏற்பாடாக சில நடை முறை பயிற்சிகளைக் கையாளலாம்..

• பிள்ளைகளின் சக்திவாய்ந்த மூளையை சரியான முறையில் பயன்படுத்தல்,
• திறமையான கற்றல், கற்பித்தல் நுட்பங்களை கையாளல்,
• தொழில் வாய்ப்புக்கு ஏற்றாற் போல் கற்கைத்திறனை ஒழுங்கமைத்தல்,
• புதிய சிந்தனைகளைக் கையாளும் வகையில் சிந்தனைக்கூர்மையைத் தோற்றுவித்தல்,
• எதையும் நிர்வகிக்கும் திறமை
• நல்ல ஆளுமையை வளர்த்தல்.

இந்தப் பயிற்சித்திட்டங்கள் சாத்வீகமான சிந்தனை போக்கையும் எதையும் வெற்றிகொள்ளும் மன உறுதியையும், வெற்றிக்கான தகுதியையும், உள உறுதியையும் ஏற்படுத்துகின்றது.

இந்தப் பயிற்சிகள் மூலம் எமது பிள்ளைகளிடத்தில் வெற்றி, சாணாக்கியம், அமைதி, மனத் திருப்தி, மற்றும் வாழ்வின் நிம்மதி போன்ற அனைத்தையும் பிரதிபலிக்கச் செய்யும்.

2. தொடர் முயற்சிகள் இடை நிறுத்தப்படுவதைத் தடுத்தல் (Don’t let them to give up the targets/ Consistency).
எமது பிள்ளைகள் கற்றல் ரீதியாகவோ அல்லது வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான எந்த விடயமாக இருந்தாலும் அதனை ஆரம்பித்து அதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் போது இடையிடையே சந்திக்கின்ற சிறிய சிறிய பிரச்சினைகள், சவால்கள் காரணமாக விரக்தியடைந்து இடைநிறுத்துவதை தவிர்க்க வேண்டும்,
ஒரு சாரதி தனது வாகனத்தைப் பாதையில் செலுத்தும் போது இடையிடையே ஏனைய வாகனங்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும், பாதை முழுவதும் ஆங்காங்கே சந்திக்கின்ற சிவப்பு சமிக்ஜை (Red signal) களுக்கும் விபத்துக்களுக்கும் நிறுத்தி நிறுத்தி கவனமாக ஓட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

அதே போல் தான் ஒரு பிள்ளை இடை நிலைப் பரீட்சையில், அல்லது அரையாண்டில் குறித்த ஒரு பாடத்தில் குறைந்த புள்ளிகளை வாங்கிவிட்டது என்பதற்காக அந்த பாடத்தை தொடர்ந்து படிப்பதையோ, மீட்டுவதையோ இடைநிறுத்துவது என்பது, தோல்வியாளனின் அடையாளமாகும், இது தொடர்பாக இன்னும் சில தகவல்களுக்கு கீழே தோல்வியாளர்களின் பண்புகள் சம்பந்தமாக பேசும் தலைப்பில் கவனிக்கலாம், இன்ஷா அல்லாஹ்.

 படிப்பைத் தொடர்வதற்கான சிறந்த வழியை அறிமுகப்படுத்தல் (introduce the Great way to start Studies).

உலகில் புத்தகம் சுமந்த, சுமக்கின்ற அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற ஒரு விடயம் தான் புத்தகத்தை கையில் எடுக்கும் போது அதை மனந்திறந்து படிப்பதில் உள்ள கஸ்டம்.

புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு படிப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தால், படிப்பதை தவிர அல்லது புத்தகத்தில் இருப்பதைத் தவிர வேறு அனைத்தும் ஞாபகத்திற்கு வரும், புத்தகத்தில் உள்ள பாடங்கள் கசக்கும், எமது கண் இமைகள் எழுத்துக்களை மறைத்துக் கொள்ளும், தாய் மொழியைக் கூட அது எமக்கு தெரிந்த மொழிதானா? என சந்தேகிக்க செய்யும், இது எமது வகுப்பு பாடப்புத்தகம் தானா? என தேவையற்ற சிந்தனைக்கு எம்மை இழுத்துச் செல்லும்..

இது அனைத்தும் ஆரம்ப பாடசாலைக் கல்வியில் எல்லோரும் எதிர்நோக்குகின்ற பாரிய சவால்கள் ஆகும்.
இதற்கு “ஆரம்ப சவால்” என்று சொல்லலாம்,
எமக்குள் இப்படிப்பட்ட சிந்தனா ரீதியான தடைகள் வருவதற்க்கு காரணம் படித்தல் என்ற செயல் எமது உணர்ச்சியுடன், மனவெழுச்சியுடன் மிக இறுக்கமான தொடர்பை கொண்டிருப்பதுவாகும்.

எப்போது நாம் நல்லதை உணர்கின்றோமோ அப்போது நாம் எமது செயற்பாடுகளுடன் மகிழ்ச்சியடைகின்றோம், எப்போது படிக்கும் மனநிலையில் இருக்கின்றோமோ அப்போது
நன்றாக படிக்கவும், படிப்பதை மனதில் பதித்துக்கொள்வதற்கும் சக்தி பெறுகின்றோம்,
எப்போது நல்ல சிந்தனையில் இல்லையோ, எப்போது படிக்கும் மனநிலையை
உணரவில்லையோ அப்போது படிப்பதற்கு அதிகமான நேரங்களைச் செலவழிக்க மாட்டோம்.

பாடப் புத்தகங்களைப் படித்து அதில் இடம்பெறுகின்ற பாடங்களை மனதில் பதிய வைத்துக் கொள்வது என்பது செங்குத்தான மலைச்சரிவில் ஏறிச் செல்வது போன்றதாகும்.
இப்போது நான் படிக்கும் மனநிலையில் இல்லை என்று சொல்லி விட்டு விலகிச் செல்கின்ற நிலை எமது மாணவர்களிடத்தில் அதிகரித்துவருகின்றது.

மாணவ தம்பி, தங்கைகளே!! படிப்பில் வெறுப்பூட்டுகின்ற இந்த மனநிலையிலிருந்து
ஆர்வமிகு நிலைக்கு எமது மனநிலையை மாற்ற வேண்டும்

அப்படியென்றால் திறமையான முறையில் அந்த நிலையை, அதாவது
படிப்பதற்கு மனநிலை இல்லை (Negative mindset to study) என்பதிலிருந்து படிப்பதற்கு மனநிலை இருக்கின்றது (Positive mindset to study)
என்ற நிலைக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?

எமது மன நிலையை சாத்தியமான திசைக்கு மாற்றி, படிப்பில் ஆர்வபடுத்த வேண்டும்.
அதற்காகக் கீழ் வரும் 6 வழிமுறைகளைச் செயற்படுத்த முன்வாருங்கள்.

1) அமைதியான மனநிலையை தேடி பிரார்த்தி:

எப்போதும் அல்லாஹ்விடத்தில் எமது கல்வி வளர்ச்சிக்காக பிராத்திக்க வேண்டும். எமது எல்லா தொழுகையின் போதும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட வழிமுறையில் செயற்படுவதற்கும் பிரார்த்திக்க வேண்டும்.

எமது பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க அல்லாஹ் காத்திருக்கின்றான்.

மலர்வது தொடர் 07 …………

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: