இலங்கை வடமாகாண முஸ்லிம்களின் 19 ஆண்டுகால அவல நிலை!

இலங்கையின் வட புலத்திலிருந்து 85000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் - தமிழ் பேசும் முஸ்லிம்கள் - ஆயுத முனையில் பலவந்தமாக 24 மணி நேர அவகாசத்தில வெளியேற்றப்பட்டு 2009, அக்டோபர் திங்களுடன் 19 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. ஒரு தாய் வயிற்று மக்களாக, தனித்துவமான பாரம்பரியங்களுடன் - ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் - வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஒரு சில மணி நேரத்தில் மனிதாபிமானவற்ற முறையில், எல்.டி.டி.ஈ. பயங்கரவாத இயக்கத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு இலங்கை வரலாற்றில் குறிப்பாக தமிழ் மக்களது வரலாற்றில் கழைபடிந்த ஓர் அத்தியாயமாகும்.

முஸ்லிம், கிருத்தவர், இந்து, கடவுள் இல்லை எனும் நாத்திகர்கள் ஆகியோர் எவராயினும் தமிழ் பேசினால் அவர்கள் தமிழர்களே என்பது தமிழ்நாட்டின் நிலை. தமிழ்போசும் முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமே தமிழர்கள் என்ற நிலையைப் புலிப் பயங்கரவாதிகள் இந்து, கிறிஸ்தவ உள்ளங்களில் விதைத்து விட்டனர்.

பரம்பரை பரம்பரையாக, மாற்றுமத தமிழ் மக்களோடு மிக நெருக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் தங்களது, வீடுகள், வருமானம் ஈட்டித் தந்த வர்த்தக நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி கற்ற, கற்பித்த பாடசாலைகள், ஆன்மீகச் செயற்படுகளை ஆற்றிய பள்ளிவாசல்கள், அரபுப் போதனா பீடங்கள் ஆகிய அனைத்தையும் பறிகொடுத்து எதிரிகளாகத் துரத்தப்பட்டார்கள்.

தாயக மண்ணிலிருந்து நாம் எதற்காக துரத்தப்படுகின்றோமென்பதைக் கூட அறிய முடியாதவர்களாக சகல சொத்துக்களையும் இழந்து, அணிந்திருந்த அதே ஆடையுடன் எங்கே போகின்றோமென்பகை; கூட தீர்மானிக்க முடியாதவர்களாக பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், இளம் பெண்கள், விதவைகள், நோயாளிகள், அங்கவீனர்கள், வயோதிபர்கள் என 85000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கூட்டங்கூட்டமாக கெடுவிதிக்கப்பட்டு சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டமை எந்தவித மானுட தர்மங்களாலும் நியாயப்படுத்த முடியாத மிருகத்தனமான - அதை விடக் கீழான கொடுஞ்செயலாகும்.

பல தசாப்த காலமாக இலங்கையின் வடக்கு மாகாணப்பகுதியில் எல்.டி.டி.ஈ. எனும் தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் கடுமையான இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். 1990 அக்டோபர் இறுதிப்பகுதியில் அனைத்து உடைமைகளையும் பறித்துக் கொண்டு, முஸ்லிம்களற்ற குறுந்தேசியவாத கனவில் மிதந்த எல்.டி.டி.ஈ இனவெறியர்கள், உண்மையான மண்ணின் மைந்தர்களை அடித்துத் துறத்தினர். இதனால், வடமாகாண முஸ்லிம்கள் அனுபவித்த துயரங்கள் வார்;த்தைகளால் வடிக்க முடியாதவை. அனாதைகளும், ஊனமுற்றோரும், விதவைகளும், சிறுவர்களும் ஒற்றையறை ஓலைக் குடில்களில் 19 ஆண்டுகள் அவர்கள் அனுபவித்து வரும் அவஸ்தையான வாழ்க்கை கல் நெஞ்சர்களையும் கரையச்செய்யும்.

1990 அக்டோபர் 23ம் திகதியில் மன்னார், யாழ்ப்பாண, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 85000 முஸ்லிம்களே இவ்விழிநிலைக்குள்ளாக்கப்பட்டனர். அவர்;களில் அதிகமானவர்கள் இன்றுவரை போதிய அடிப்படை வசதிகள் (உணவு, உறையுள், உடை, நீர், மின்சாரம்) ஏதுமற்ற ஓலைக்குடில்களிலும், கூடாரங்களிலும் சொல்லொன்னாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாக அகதி மக்களிலேயே இருந்து தேர்வு செய்யப்பட்டு பாராளுமறம் சென்ற அமைச்சர் றிஸாட் பாராட்டத்தக்க சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

1990 அக்டோபர் 21ம் திகதியில் மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, முஸ்லிம்களைப் புலம்பெயர்ந்த செயற்பாடு அதே மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களைப் புலம் பெயர்த்ததுடன் முடித்து வைக்கப்பட்டது.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஆங்காங்கே பல மாவட்டங்களில் குடியேறினர். 1990 நவம்பர் 2ம் திகதி வடமாகாணத்தில் முஸ்லிம்களின் தொகை பூஜ்யமாகும். ஆனால், புலிகளினால் பணத்துக்காகவும் வேறு அவர்களின் இலாபங்களுக்காகவும் பிடித்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 55 முஸ்லிம்கள் அங்கிருந்தனர். அதில் 22 பேர் ஒன்றரை வருடத்தின் பின்னர், சிலர் 6 மாதத்தின் பின்னர் பல இலட்சம் ரூபா பணம் கப்பமாகக் கட்டப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஏனைய 33 பேரின் நிலைமைகள் பற்றியோ அவர்கள் உயிருடன் உள்ளார்களா? என்ற விபரங்கள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை.

1990 அக்டோபர் 18ம் திகதி சாவகர்ரேரிப்பகுதியில் வசித்து வந்த 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் சொத்துக்களை வைத்துவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர். ஆயுதம் தாங்கிய புலிகளின் வேண்டுகோளுக்கு அஞ்சிய முஸ்லிம்கள் சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு, அணிந்திருந்த ஆடையுடன் வெளியேறினர். இவ்வாறு வடக்கின் எல்லாப்பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி அன்று முஸ்லிம்களுக்கு எதிராகவே எல்.டி.டி.ஈ பாசிசவாதிகளால் பயன்படுத்ப்பட்டது. இவ்வாறு தமது வீடுகள், கிராமங்கள், நகரங்களை விட்டு வெளியேறியோர் தமது பெறுமதிமிக்க சொத்துக்களையும் உடைமைகளையும் அந்தந்த இடங்களிலேயே விட்டுச் செல்லுமாறும், மீறுவோர் பகிரங்கமாக சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்படுவர் என்றும் ஆயுத முனையில் மிரட்டப்பட்டனர்.

ஆரம்ப காலத்தில் அரசுப் படைகளுக்கும் தமிழ் போராட்டக் குழுக்களுக்குமிடையிலான போராட்டம் 1983ம் ஆண்டுதான் முதன் முதலாக ஆரம்பித்தது. அப்போது, வடகிழக்கு முஸ்லிமிகள் இவ்விரு பகுதியினராலும் சிறிதளவான பாதிப்புக்கு உள்ளானர்கள். 1985ம் ஆண்டு முதல் வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் பல வழிகளிலும் தாக்கப்பட்டனர். அழிவை ஏற்படுத்திய அர்த்தமற்ற இந்த யுத்தத்தினால் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டனர். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக்கும்பல்களினால் நசுக்கப்பட்டனர். காலத்துக்கு காலம் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளும், தாக்குதல்களும், கொலைகளும், கொள்ளைகளும், பலாத்காரமும், சுதந்திரமின்மையும் முஸ்லிம்களை முற்றாக அழித்துவிட எடுத்த முதல் முயற்சியாகவே இருந்தது. இறுதியில் ஈழப்பகுதியிலிருந்து அடித்துத்துரத்தப்பட்டனர்.

எல்.டி.டி.ஈ. பயங்கரவாத இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இக்கொடூரச் செயற்பாடு குறித்து, ஈழத் தமிழினம் இறுக்கமாக மவ்னம் சாதித்தது, கீர்த்தி பெற்ற சில அறிவு ஜீவிகள் (?) இந்நிகழ்வு முற்றிலும் சரியானதென்று நியாயப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளை இந்திய - முஸ்லிம்கள், குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடக்கு முஸ்லிம்களுக்காகக் புலிகளைக் கண்டித்துக் குரல் கொடுத்ததை வடக்கு முஸ்லிம்கள் நன்றியோடு நினைவு கூறுகின்றனர்.

இன்று வடமாகாணத்தில் 100க்கும் அதிகமான பள்ளிவாயில்கள் அதான் ஒலிபரப்பின்றி பாழ் அடைந்து கிடக்கின்றன. இவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் வெறும் வனாந்தரமாகக்கிடக்கின்றன. சில வீடுகளில் புலி சார்பான தமிழ்மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். வடக்கில் செல்வச் செழிப்புடன் அதிகமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த முஸ்லிம்கள் இன்று அகதி முகாம் சூழலில் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி பொருளாதார அடிப்படையிலிருந்து பாதிக்கப்பட்டு தமது உறைவிடம், கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், ஒழுக்கம் ஆகியன பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றர்கள்.

பாஸிச வெறியர்களினால் இலங்கை முஸ்லிம்கள பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிற இடமே தெரியாத நிலையில் இருக்கும் போது இந்தியா வாழ் தமிழ்ப்பேசும் முஸ்லிம்களில் பலர் இந்தப்பிரச்சினை பற்றி தெளிவான அறிவின்றி இந்த கொடும் புலிகளை ஆதரிப்பதை நாம் காணும் போது மனம் வேதனையடைகிறது.

புலிகள் இயக்கத்தினர் சமாதனத்திற்கான வழியை நிராகரித்து கொரில்லா முறையில் அரசுப் படைகளையும் மிக முக்கியமான இடங்களையும் முஸ்லிம்களையும் தாக்கி வந்தனர். இவர்கள் தமிழனின் உரிமைக்காக போராடுகின்றார்கள் என்று வெளி உலகம் நினைக்கிறது. ஆனால், புலிகள் இயக்கத்தினர் தமிழர்களுக்கே எதிரானவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

பல சந்தர்ப்பங்களில் எல்.டி.டி.ஈ யை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் அழைத்த போது, அவர்கள் மறுத்து பேச்சுவார்த்தையை பிரயோசனமற்றதாக மாற்றினார்கள்.

அத்தோடு, தூங்கிக் கொண்டிருந்த கிழக்குமாகாண ஏறாவூரில் அப்பாவிப் பொதுமக்கள், சிறுவர்கள், யுவதிகள், முதியவர்கள் கண்டதுண்டமாக ஈவிரக்கமின்றி வெட்டிக்கொன்று குவிக்கப்பட்டனரே இவ்வளவு தானா? காத்தான்குடி பள்ளியில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான வாலிபர்கள் முதியவர்கள் சிறுவர்கள் குண்டு வீசித்தாக்கப்பட்டனரே! பள்ளியே இரத்த வெள்ளத்தில் குளித்தது. இவ்வாறு புலிப் பயங்கரவாத இனவெறியர்கள் செய்த அடாவடித்தனத்தை இலகுவில் இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடமாட்டார்கள்..

இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடப்பது என்ன? நடந்திருப்பது என்ன என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது.உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்.

83ம் ஆண்டு அதாவது வரலாற்றில் கருப்பு ஜுலை என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாளில் சிங்களவர்கள் தமிழர்களின் உடமைகள் மீது அத்துமீறி, யாழ் நூல்நிலையத்தை தீயிட்டு, சில கொலை கொள்ளைகளை நடத்தி, சில தமிழ்ப்பெண்களை கற்பழித்தார்கள். இதன் காரணமாக கொதித்தெழுந்த தமிழ் வாலிபர்கள் பல இயக்கங்களாக செயற்பட்டார்கள். இவ்வியக்கங்கள் சிங்களவர்களை வெளியுலகிற்கு மிலேச்சர்கள் என்று காட்டினார்கள். இவ்வாறு பல இயக்கஙகள் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக என்று ஆரம்பித்து, காலம் செல்லச் செல்ல இவ்வியக்கங்கள் தமிழர்களுக்கு எதிரானதாகவே செயற்பட்டது. தமிழ் வாலிபவர்களை கொன்றுகுவித்தது. கோயில்களில் இரவு வேளையில் புகுந்து கோயில் சொத்துக்களை சூரையாடியது. பணக்காரர்களிடம் பலவந்தமாக அவர்களின் சொத்தைப் பறித்தெடுத்தது.

இப்பயங்கரவாதிகள் சுதந்திரதாகம் கொண்டவர்கள் என்றும் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுகின்றவர்கள் என்றும் பலரும் நினைத்தார்கள்.சில முஸ்லிம் இளைஞர்களும் இவர்களின் போராட்டத்தில் இணைந்து உயிர் நீத்தார்கள். இவ்வாறு, தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று நினைத்த வடமாகாண முஸ்லிம்களை விரட்டியடித்தது எந்தவகையில் நியாயம்? கற்பழிப்பும் கொலையும் கொள்ளையும் நிகழ்த்தியவர் சிங்களவன். உதவியும் ஒத்தாசையும் புரிந்து கொண்டிருந்த அப்பாவி நிராயுதபாணி முஸ்லிம்களை தயவு தாட்சண்யமின்றி, பிறந்த மண்மை விட்டு விரட்டி விட்டனர். இது புலிகளின் கோழைத்தனத்தை நிரூபிக்கின்றது. முஸ்லிம் சமூகத்தை, சட்டவிரோத ஆயுத வன்முறைக்குள் அடக்கிவிடலாம் என்று கனவு கண்ட எல்.டி.டி.ஈ. பயங்கரவாதம் இன்று நடுச் சந்தியில் நிர்வாணமாகி நிற்கிறது. வடமாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இவர்கள் செய்த அநியாய வரலாறு இன்று அவர்கள் மீது திரும்பியுள்ளது.வரலாறு என்றும் துரோகிகளை மன்னிப்பதில்லை.

வடமாகாணத்தில் முஸ்லிம்கள் 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் வெளியேற்றப்படும் வரை இந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் அந்நியோன்யமாகவே காணப்பட்டது.

இன்றும் கூட தமிழ் மக்கள் எமது விரோதிகளல்லர். புலிப் பயங்கரவாதிகள்தான் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து விட்டனர் என்று முஸ்லிம்கள் கூறுவதை எம்மால் செவிமடுக்க முடிகிறது.

ஏன் இவ்வாறு எல்.டி.டி.ஈ பாசிசவாதிகள் முஸ்லிம்களை வெளியேற்றினர் என்றால் அவர்களுக்கு முஸ்லிம்கள் அநியாயம் செய்தார்களா? அல்லது காட்டிக்கொடுத்தார்களா என்றால் அதுவுமில்லை. அவர்களுடன் கைகோர்த்து நண்பார்களாக, அவர்களுக்கு உதவி செய்துகொண்டு தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

இந்த வெளியேற்றம் எந்த வகையிலும் நியாயமற்றது. வடமாகாண அப்பாவி முஸ்லிம்களின் பெறுமதிக்கத் தக்க பொருள்களும் சொத்துக்களும் அதற்கு மேலாக சிலரின் உயிர்களும் ஆயுத முனையில் பறிக்கப்பட்டன. எந்த வகையிலும் மனித சிந்தனை ஏற்றுக் கொள்ளாத அளவு குறிப்பிட்ட சில மணி நேரத்தில் வெளியேறும் படி கூறியது எமக்கு எவ்வளவு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் தம்முடன் எந்த ஒரு பெறுமதி மிக்க பொருளையும் எடுத்து சென்று விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் பிரதேசங்களில் வெளியேறும் வாயில்களில் முஸ்லிம் பெண்களும் ஆண்களும் சிறுவர் சிறுமியர்களும் முதியவர்களும் ஆயுத முனையில் சோதனையிடப்பட்டனர்.

இலங்கையில் பொதுவாக வடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் சரியான நிலைகுறித்த தகவல்கள் இந்திய வாழ்தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாத தமிழ் பேசும் மக்களுக்கும் தெரிவிப்பது விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்களுக்கு இங்குள்ள உண்மை நிலையைப் புலப்படுத்தலாம்.

இந்தப் பாரிய இனச் சுத்திகரிப்பு புலம்பெயர்த்தலுடன் பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகள், அசையத்தக்க, அசையாச் சொத்துக்கள், கால்நடைகள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் யாவுமே பகற்கொள்ளையிடப்பட்டன. இவற்றில் எவற்றையுமே புலம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களினால் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இந்த இழப்புக்களை நோக்கும் போது:

 128 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

 189 அரபுப் போதனா பீடங்கள் செயலிழந்துள்ளன.

 65 அரசாங்கப் பாடசாலைகள் புலிகளின் தளங்களாக்கப்பட்டது.

 1400 க்கும் மேற்பட்ட வர்த்தக கைத்தொழில் நிறுவனங்கள் தரைமட்ட மாக்கப்பட்டுள்ளன.

 1500 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் காணிகள் சுடுகாடாகியுள்ளன.

 பல ஆயிரக்கணக்கான கால்நடைகள் சூரையாடப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

இவற்றைப் பேராதனைப் பல்கலைக்கழக முது நிலை விரியுவுரையாளரும், முஸ்லிம் சமூக ஆய்வாளருமான கலாநிதி எஸ்.ஹெச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு புள்ளி விபரத்தில் பின்வருமாறு தருகின்றார்கள்.

விபரமும், தொகையும் பின்வருமாறு:

1. குடும்ப ரீதியான இழப்புகள் 5,408 மில்லியன்.

2. நிறுவன ரீதியான இழப்புகள் 2,107 மில்லியன்

3. சமய ரீதியான நிறுவன இழப்புகள் 640 மில்லியன்

4. விவசாயக்காணி, ரீதியான இழப்புகள் 180 மில்லியன்

மொத்த இழப்புக்கள் 8,335 மில்லியன்

வாகனங்கள், கால்நடைகள் தனியார் நிறுவனங்கள் போன்ற பலவற்றின் இழப்புக்களையும் உள்ளடக்கி நோக்கும் போது 10,000 மில்லியன் ரூபாய்களையும் விட அதிகமாகும்.

இத்தோடு கல்வி, கலாசார பண்பாட்டு ரீதியில் இந்தச் சமுதாயம் பின்னடவை சந்தித்துள்ளது வேதனைக்குரிய விடயமாகும். புத்தள மாவட்டத்தில் அகதி முகாம்களிலுள்ள 05-19 வரையிலான 14,905 சிறார்களில் 11,924 பேர் பாடசாலை சென்று கல்வியைத் தொடர வசதியின்மையாயுள்ளனர்.

உண்மையில் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் போது இருந்த நிலையும் இப்போதுள்ள நிலையும் பாரிய வேறுபாடுடையது.

இவர்கள் வெளியேற்றப்படும் போது, இலங்கை நாட்டில் ஒரு தேசிய இராணுவம், ஓர் அரசாங்கள் இருந்தும், வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் சர்வதேசிய செல்வாக்கும், இராஜ தந்திரமும் இருந்தும், அநாதரவான ஒரு சிறுபான்மை சமூகம் ஒட்டு மொத்தமாக துடைத்தெறியப்பட்டபோது, குருட்டுக் கண் பார்வையுடன் இருந்தது. இங்குள்ள கட்சி அரசியல் சதுரங்கத்தில் வெல்லும் அனைவரும் இதில் ஒரே மாதிரியான போக்கையே கைக்கொள்கின்றனர்.

மனித உரிமைக்காகவும், கொடூர, உயிர் கொல்லி வன விலங்குகளுக்காகவும் மாநாடு கூட்டி, ஜீவகாருண்யம் பேசக் கூடிய ஐ.நா.வும் அதன் அங்த்தவர்களும், சர்வதேச அமைப்புகளின் கூறுகளான ஐ.சி.ஆர்.சி, யு.என்.எச்.சி.ஆர் போன்ற அமைப்புகளும் தொடர்ந்தும் அகதிகள் விடயத்தில் மவ்னம் சாதிக்கின்றன.

இவற்றை நோக்கும்போது, இலங்கை வட மாகாண அகதி முஸ்லிம்கள பற்றிய தேசிய – சர்வ தேசிய கண்ணோக்கானது, இதுவரை இம்மக்களின் மீள்குடியேற்றத்திற்கான சரியான நடவடிக்கையாக இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை என்பது புலனாகிறது.

எனவே, இச்சமுதாயத்தின் கடந்த பத்தொன்பது ஆண்டு கால 'அவலமிக்க அகதி முகாம் வாழ்க்கை' அனுபவம் மிகவும் பார தூரமான பாதிப்புக்களைத் தந்த கால கட்டமாக இருக்கின்றமையால், அப்பாதிப்பின் தாத்பரியம் எதிர்கால இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படுத்த இருக்கின்ற பல்வகை இழப்புகளை மனசாட்சியின் முன் நிறுத்தி, மிக நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து இவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் தார்மீகக் கடமையாகும்.

1990 அக்டோபர் மாதம் வட புலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் ஒரே ஒரு எதிர்பார்ப்பு; மீண்டும் தமது சொந்தத் தாய் மண்ணில் அமைதியாக வாழ்வதாகும்.

வடபுலத்தில் வாழ்ந்த சிறுபான்மையினமாகிய தமிழ் பேசும் முஸ்லிம்களை அவர்களுடைய சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்த போது, இறுக்கமாக மௌனஞ் சாதித்த ஈழத் தமிழினமும், இந்து அமைப்புகளும் ஏனையவர்களும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இந்த வரலாற்றுக் கறையைத் துடைப்பதற்கும், வடக்கு முஸ்லிம்களை மீளகுடியேற்றுவதற்கும் இனியேனும் முயற்சிக்க வேண்டும்.

அத்தோடு தேசிய, சர்வ தேசிய சமூகம் குறிப்பாக பலவந்த வெளியேற்றத்தையும், அதனால் ஏற்பட்ட கல்வி, கலாச்சார, பொருளாதார, ஒழுக்கப் பண்பாட்டுப் பின்னடைவுகளையும் இழப்புகளையும் நிச்சியம் மீண்டும் பெற்றுக் கொடுக்க ஒன்றாக குரல் கொடுக்கவேண்டும் என்ற தார்மீகக் கடமையை வடக்கு முஸ்லிம்கள ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இலங்கை தாயகத்தில் மீண்டும் குடியமர்த்த அழுத்தம் கொடுக்கவேண்டும் என இம்மக்கள் வேண்டுகின்றனர்.

தற்போது, எல்.டி.டி.ஈ. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையிலும் அவர்களின் மீள்குடியேற்றக் கனவு இதுவரை கனவாகவே தொடர்கிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழக எம்.பி.க்கள் குழு வன்னிக்குச் சென்று இந்து,கிறிஸ்தவ அகதி முகாம்களைப் பார்வையிட்டது. எனினும், வடமாகாண முஸ்லிம் அகதிகள் வசிக்கும் புத்தளப் பிரதேச முகாம்களுக்கு வருகைதரவில்லை. அவர்களது அறிக்கையிலும் இவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது இவர்களின் பக்கச் சார்பு நிலையைப் புலப்படுத்துகிறது.

இன்றும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழனுக்காக முஸ்லிம்கள்,மற்றும் பலர் உதவி செய்கின்றனர்.இவ்வாறுதான் வடக்கில் முஸ்லிம்கள் வாழும் போதும் கோடிக்கணக்கில் உதவி செய்து வந்தனர். ஆனால், இறுதி விளைவு! சொந்த மண்ணில் வாழும் உரிமை பறிக்கப்பட்டதுதான் மீதி.

முஸ்லிம்கள் எவ்வளவு உதவி செய்தாலும் பயங்கரவாதிகள், நன்றி கெட்டவர்கள் என்பதை அழிக்கப்படும் வரை புலிகள் நிரூபித்துக்கொண்டே இருந்தனர்.

நன்றி: எம்.ஏ.ஹபீழ், இலங்கை.
(வழர்ந்துவரும் எமது இளம் எழுத்தாளர்  எம்.ஏ.ஹபீழ் அவர்கள் பல புத்தகங்களுக்கு சொந்தக்காரர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது)

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: