ரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்

ரமழான் மாதத்தை அடைவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னரே உலகில் எல்லோருமே ரமழானை வரவேற்று பேசுகின்றோம், அந்த புனிதமான மாதத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக எழுதுகின்றோம், கதைத்துக்கொள்ளுகின்றோம், அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆங்காங்கே ஏற்பாடு செய்கின்றோம்.

நாம் எதிர்பார்த்தது போல மிக தூரத்தில் இருந்த அந்த புனிதமான மாதம் வந்ததும் நன்மைகளை கொள்ளையடித்துக் கொள்ள வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு, முண்டியடித்துக்கொண்டு செயற்படுகின்றோம்.

நாட்கள் கடக்க ரமழான் 5, 6 என்று எம்மை தாண்டிச்செல்லும் போது எமது வேகமும் தன்நம்பிக்கையும் படிப்படியாக குறைந்து கொண்டு செல்லுவதை காணலாம்.

முதல் நோன்பன்று எல்லா ஊர் பள்ளிவாசல்களும் நிரம்பி வழியும், எல்லா வீடுகளிலும் எல்லோருடைய கைகளிலும் அல் குர்ஆன், எல்லோருடைய வார்த்தைகளிலும் உண்மை, எல்லோருடைய நடத்தைகளிலும் நேர்மை, எல்லோருடைய முகத்திலும் புன்முறுவல், ஆனால் நாட்கள் கடக்க, கடக்க எல்லோருடைய அமல்களும் எம்மை அறிந்தோ அறியாமலோ குறைந்து கொண்டு செல்லுவதை நோட்டமிட முடியும்.

பள்ளிகளில் தொழுபவர்களின் வீதம் அல் குர்ஆன் ஓதுபவர்களின் வீதம் குறைந்து கொண்டே செல்லும். புகைத்தலை இடை நிறுத்தியவர்கள் மெதுமெதுவாக தொடர்வார்கள், முதல் இரண்டாம் நோன்பு நோற்றவர்கள் மீதி நோன்புகளில் கள்ளத்தனம் பண்ணுவார்கள்.

இந்த நிலை படிப்படியாக தொடர்ந்து சென்று ரமழானுடைய மாதம் முடிவுற்று புனித பெருநாள் வந்ததும் அந்த தினத்தை எமது மொத்த அமல்களின் பிரியாவிடை தினமாக மாற்றிக் கொண்டு, அந்த தினத்துடன் மொத்த நல்ல அமல்களுக்கும் பிரியாவிடை கொடுத்து விடுகின்றோம்.


இந்த நிலையையும் தாண்டி எமது சமூகத்தில் சிலரின் வாழ்க்கை பாவகரமானதாக, கவலைக்குடையதாக இருக்கின்றது, புனித ரமழான் மாதம் வந்ததும் எமது சூழலில் எம்முடன் சேர்ந்து வாழக்கூடிய அந்நிய மதசகோதர்கள் இந்த மாதம் முடியும் வரை பகிரங்கமாக பாவக்காரியமான விடயங்களில் ஈடுபடமாட்டார்கள், ஆனால் எமது சமூகத்தை சார்ந்தவர்கள் பகிரங்கமாக புகைப்பார்கள், சாப்பிடுவார்கள், தடுக்கப்பட்ட முழு பாவத்திலும் ஈடுபடுவார்கள். இந்த நிலை இன்று பரவலாக எமது முஸ்லிம் சமூகத்தில் பரவிவருகின்றது.


அன்பின் சகோதர்களே வருடத்தில் ஒரு முறை எம்மை வந்தடையும் புனிதமான இந்த மாதத்தில் முடியுமான அளவு எமது பாவங்களை போக்கிக்கொள்ளுவதற்கு முயற்சிப்பதுடன், எம்மை கடந்து சென்ற இந்த மாததில் நாம் பெற்ற அனுபவத்தையும் பக்குவத்தையும் பயிற்சிகளையும் வைத்துக்கொண்டு மீதி வரும் 11 மாதங்களிலும் நல்ல முறையில் எமது வாழ்க்கையை கடத்தி எம்மை படைத்த அல்லாஹ் எம்மிடம் இருந்து எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புக்கு பதிலளித்து அவன் எமக்கு தயார் செய்திருக்கும் சுவனத்தை அடைவோமாக ஆமீன்.


இஸ்ஸதீன் றிழ்வான் – அரபு வளைகுடா


குறிப்பு: எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

http://en.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/