என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 03

தொடர் மூன்று:


வெற்றியாளர்கள் வெற்றிக்கான இரகசியங்களை அனுபவ ரீதியாக பெற்றுக்கொள்கிறார்கள். அந்த அனுபவத்தின் மூலம் தங்கள் பிள்ளைகளை சிறப்பான சாதனையாளர்களாக மாற்ற உதவுகிறார்கள்.

வெற்றிகரமான பெற்றோர்த்துவம் (successful parentship) என்பது எது?, அது எந்த முறையில் கையாளப்படுகிறது? என்பவைகளை உள்ளடக்கும் விதத்தில் ஒரு பெற்றோரும் மகனும் தனது அன்றாட வாழ்க்கையில் நடமாடுவதை செயலுரு வசனங்களாக வடிவமைக்க முயற்சித்துவருகிறேன்.
இந்த தந்தை மகன் அனுபவம், ஒரு பாரிய அனுபவ வலைபின்னலிலிருந்து வடிகட்டப்பட்டது என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

”.......... நான் எனது தாயை அதிகமாக நேசித்த காலம் அது, பாடசாலையில் ஏழாம் வகுப்பில் சேர்ந்த புதிது, பணக்கார நண்பர்கள் அதிகமாக இருந்த ஒரு வகுப்பில் எனது அந்த ஆண்டு ஆரம்பமானது.
எனது பாடசாலைத் தேவையானாலும் ஏனைய தேவையானாலும் தந்தையிடம் நேராக கேற்க தயங்குவேன் அவைகள் தொடர்பாக பேச மாட்டேன் அவருடன், எதுவானாலும் தாயிடம் சைகை காட்டினாலே, காரியம் நடந்த மாதிரிதான்.

ஒரு நாள் பாடசாலைச் சுற்றுலாவுக்கான அறிவிப்பு பாடசாலை அதிபரால் வெளியிடப்பட்டிருந்தது. செய்தி கேட்ட நான் அதிக சந்தோஷத்தில் வீடு திரும்பி எனது சுற்றுலாவுக்கான பணத்தை தாயிடன் கேட்டிருந்தேன்.
நான் சிறிய வயது, தாயின் அன்புக்குரிய தோழன், அதனால் நான் தூரம் செல்வது என் தாய்க்கு விருப்பமில்லை. நான் பிடிவாதமாக நின்றேன். ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை தந்தை வீட்டில் இல்லை, தாயை கெஞ்சி, ஜந்தாய் வலைந்து மறு நாள் காலை சுற்றுலாவுக்கு பணம் கொடுக்க வேண்டுமென நின்றேன். கண் கலங்கியவனாக..........
கண்களிருந்து கண்ணீர் சொறிந்து கறைபடிந்த நிலையில் வீட்டு வாசல் படிக் கட்டில் நின்றும், சாய்ந்துமாய் நின்ற போது திடீரென தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். நான் நிலைகுலைந்து நிற்பதை பார்த்து அதிர்ந்து போய், முகம் சுருண்டவராய் தாயை நெருங்கினார்.
தாயிடம் என் செவிக்கு எட்டாமலே சில கேள்விகள், அது முடிய எனக்கும் புரியும் படியான சில கேள்விகள், சில வினாடிகளில் சுற்றுலா பணம் கிடைப்பதற்காக தாயிடமிருந்து ஒரு பச்சைக்கொடி சைகையைப் புரிந்து கொண்டேன்.

அன்று தான் தந்தையின் தனித்துவச் சிறப்பையும் தாழ்மையான அன்பையும் என் பிஞ்சுக் கண்களால் பார்க்க முடிந்தது.
சந்தோஷப் பட்டவனாக இடம் நகர்ந்தேன்.
சற்று தூரமானதும் என் தாய் கேட்ட கேள்வி ஒன்று எனது காதுக்குக் கிட்டியது.

கண்ணீர் சிந்திய மகனை எப்படி உங்களால் ஒரு நிமிடத்தில் சந்தோஷப் படுத்த முடிந்தது? இதுதான் என் தாயின் கேள்வி. தந்தை முகம் நிமிர்ந்து, நீண்ட பேச்சை ஆரம்பிப்பது போல தனது வார்த்தைகளை  தொடக்கினார்.
அந்த வார்த்தைகளை கேட்ட பொழுதிலிருந்தே  நான் என் தந்தையின் அன்புக் காதலனானேன், அவரின் நடை உடை பாவணை என அனைத்தையும் அணுவனுவாக ரசிக்க ஆரம்பித்தேன், நிறைய புதிய விடயங்களை கற்க ஆரம்பித்தேன்.

எனது வீட்டிலேயே எனது தந்தையாக ஒரு பேராசிரியரை பெற்றிருப்பதை இப்போதே புரிந்து கொண்டேன்.

நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் வயதுடையவனாக இருந்த போது என் தந்தை என்ன செய்கிறார், அவரது அன்றாட நடத்தைகள் எப்படியானது? அவரது ஓய்வு நேரங்களை எப்படி கடத்துகிறார்? என்பதையெல்லாம் தெரியாமலே அவருடன் அவர் கைகளுக்கிடையில் வளர்ந்ததை நினைத்து வருத்தப் பட்டேன்.

அந்த நாள் முதல் தான் எனக்கு சுய சிந்தனை பிறந்திருப்பதாக நினைத்துக் கொண்டேன்.

என் தந்தையின் அந்த ஒரு விடை என்ன வென்று சொல்லியே ஆக வேண்டும்.
தாயை பார்த்துச் சொன்னார்,
எமது நிழலில் 12 வருஷங்களாய் கைகளுக்கும் கால்களுக்குமிடையில் வாழும் அந்த சிறுவனை எப்படி சந்தோஷப் படுத்துவது என்று தெரியாமலே நீ வாழ்கிறாய், ஒவ்வொரு பிள்ளையும் நாளுக்கு நாள் வளர்கிறார்கள், அவர்களை கடக்கின்ற ஒவ்வொரு நாளிலும் புதிது புதிதாக விடயங்களை கற்றுக் கொள்வதற்கு நாம் அவர்களுக்கு முன்னால் முன்மாதிரி முகங்களாக காட்சிப் படவேண்டும்.

ஒவ்வொரு வயதுடையவர்களுக்கும் தனித் தனி பாசை இருக்கிறது, நடை, உடை, பாவணை இருக்கிறது. அதனை புரிந்து கொண்டு நடந்தால் நாம் வெற்றிபெற்றுவிடுவோம், என்று வாயை மூடாமல் பேசிக்கொண்டே போனார்.

கண்மீது கண் வைத்து பார்வையை தாழ்த்தாது தந்தையின் வார்த்தைகளையும் கை வாய் பாவணைகளையும் ஒரு பத்திரிகை நிரூபர் மாதிரி கேட்டுக்கொண்டிருந்தாள் என் தாய்.
ஸகரியா நபியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா? என்று ஒரு கேள்வி, தாய் ஆம் ஆம் அவர் ஒரு நபி, என்றவாறு சில வார்த்தைகளை சொல்லி தாய் பேச ஆரம்பிக்கும் போதே அல் குர்ஆனிலிருந்து சில வசனங்களைச் சொல்லலானார்.

"ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை” (என இறைவன் கூறினான்)
 "என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன்என்று அவர் கூறினார். (அல்குர் ஆன் 19 : 7-8)
இந்த வசனத்தில் ஸக்கரியா அலை அவர்கள் அல்லாஹ்விடத்தில் கேட்ட கேள்விக்கு, அல்லாஹ்வின் பதிலிளிருந்து நமக்கு மிகப் பெரிய முன்மாதிரி ஒன்று கிடைக்கிறது.

அதாவது ஒருவரின் பிரச்சினை, சந்தேகத்திற்கு விடையளிக்கும் போது அவரின் அறிவு, அவரது அப்போதைய நிலை என்பவைகளை கவனித்து பதிலளிக்க வேண்டும் என்பதுவே அதுவாகும்.

"அப்படித் தான். அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன்என்று உமது இறைவன் கூறுகிறான் என்றார்".   (அல்குர் ஆன் 19 : 9)

இந்த வசனங்களை சொல்லிக்காட்டி எனது தாயை விளக்கப்படுத்தும் போது, நான் அல் குர் ஆனை எடுத்து அந்த வசனங்களை தேடிப் பார்த்தேன், அப்போது அது போன்று இன்னுமொரு செய்தியை அதே அத்தியாயத்தில் பார்க்க முடிந்தது.

("நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார். )"
 "எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார்". (அல்குர் ஆன் 19 : 19.20)

என்ற மர்யம் அலை அவர்களின் கேள்விக்கு அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கின்றான்.

("அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். )"(அல்குர் ஆன் 19 : 21)

ஒவ்வொருவரதும் நிலையை கவனித்து காரியங்களை சாதிக்க வேண்டும் என்பதை, எனது தந்தையின் இந்த உபதேசத்தின் போதுதான் தெரிந்து கொண்டேன்.

எனது தந்தை தாயுடன் பேசிய விடயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது,
நீ உனது மகனை அதிகம் அன்பு செலுத்துவது நான் அறிந்ததே, அப்படியென்றால் அவனது கல்விக்கும் எதிர்காலத்திற்கும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தி!.

நபி ஸல் அவர்கள் இன்னு அப்பாஸ் ரலி அவர்களுக்கு இவ்வாறு பிரார்த்திருக்கிறார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அணைத்து இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடுப்பாயாகஎன்று கூறினார்கள்’’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (ஆதாரம் – புகாரி)


படரும்...............


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: