ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சவுதியிலிருந்து ஒரு மடல்!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…


இசைத்துறையில் ஆஸ்கார் விருது பெற்ற அன்பு சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு…

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக!

‘சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு’,  ‘புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை.

ஆஸ்கார் விருது பெற்றபோது எல்லா புகழும் இறைவனுக்கே! என்று மிகத் தெளிவாக அறிவித்து எங்களைப் போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தினீர்கள். இஸ்லாத்தில் இசை என்பது தடுக்கப்பட்டது. ஒரு சாராயக்டையை அல்லது ஒரு விபச்சார விடுதியை நடத்தி அதன் மூலமாக வரும் கோடிக்கணக்கான வருமானத்தை ஒருவன் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் அவன் செய்யும் வியாபாரம் ஹலாலாக ஆகிவிடாது. தடுக்கப்பட்டதை செய்து மக்களை வழிகெடுத்ததற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இஸ்லாமிய நியதி. உங்களது இசையும் அது போன்றதே! நீங்கள் அமைக்கும் இசையானது வெறும் இசையுடன் மட்டுமின்றி ஆபாசக்காட்சிகளுடன் வெளியிடப்படுகின்றன. அந்நியர்களுடன் சரச  சல்லாபத்தில் ஈடுபடுவதும் அங்க அவயங்களை மாற்றாருக்கு காண்பிப்பதும் இஸ்லாத்தில் மிகப்பெரும் தவறு என்பதை தாங்கள் அறியாமலிருந்தால் அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். ஒரு தீமையை செய்ததற்காக கிடைத்த விருதை நீங்கள் பெற்றபோது ‘எல்லா புகழும் இறைவனுக்கே! என நீங்கள் விளித்தது ‘நன்மையும் தீமையும் இறைவனிடத்தில் இருந்து வருபவை’ என்ற இஸ்லாமிய கோட்பாட்டின் படி மட்டுமே சரியானது. ஆனால் தீமை செய்ததற்கான தண்டனையை மறுமையில் அனுபவித்தே ஆக வேண்டும். 

ஒருவன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்து வந்தால் அவனது முந்தைய பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகின்றான் என நமது வழிகாட்டியாகிய நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்ட நீங்கள் மீண்டும் தர்ஹாக்களுக்கு சென்று இணைவைப்பு எனும் பாவத்தை சம்பாதித்து வருகின்றீர்கள்.காத்ரீனா கைஃப், ஷில்பா ஷெட்டி போன்றவர்களெல்லாம் தலையில் பூக்கூடை அணிந்தவர்களாக அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்கிறார்கள் என்றால் அது பிழைப்புக்காக! முஸ்லிம் ரசிகர்களும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நப்பாசையும் தனது படம் நிறைய நாள் ஓடவேண்டும்  என்ற சுயலமும் தான் அதற்கு காரணம். அவர்களை பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்று. கோவிலுக்கும் செல்வார்கள், சர்ச்சுக்கும் செல்வார்கள், தர்ஹாவுக்கும் செல்வார்கள்.

இறைவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு எதையும் தந்திட முடியாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ‘எம்மதமும் சம்மதம்’ என்று சொல்பவன் ஏக இறைவனை வணங்கக் கூடியவனாக இருக்க முடியாது. பல தெய்வ கொள்கைகளை தகர்த்து ஏக தெய்வ கொள்கையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அப்படியிருக்க கல், மண், கப்ரு, மகான் என்பனவற்றிற்கு சக்தி எங்கிருந்து வரும். அவைகளால் திரைப்படம் அதிக நாள் ஓடும் என நீங்கள் நம்பினால் நீங்கள் இஸ்லாத்திலிருந்து விலகி விட்டீர்கள் என்றே அர்த்தம். உங்களை ஒரு இஸ்லாமியராக உலகம் பார்ப்பதால் தர்ஹாக்களுக்கு நீங்கள் செல்வதை இஸ்லாமிய வழிபாட்டில் ஒரு பகுதியாக சிலர் எண்ணும் வாய்ப்புகளுண்டு. அது களையப்பட வேண்டும். ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், உங்களை ஜித்தாவில் வரவேற்றவர்கள் இசை என்பது ஹராமென்றோ, தர்ஹாக்களிடம் கையேந்துவது மிகக் கொடிய பாவம் என்றோ தங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பது தான். உங்களை வரவேற்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் அனைவருமே ஒரு பிரபலத்துடன் போஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் நடந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

மக்காவில் உம்ரா செய்ய வேண்டுமென்று வந்ததாகவும் அந்த புண்ணிய பூமியில் தங்களது பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்றும் விரும்பியதாக தாங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். அஜ்மீர் தர்ஹா, கடப்பா தர்ஹாவிற்கு சென்று பிரார்த்திப்பது போன்றதல்ல மக்காவுக்கு செல்வது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணப்படி தான் செயல்கள் அமையும் என்பது புகாரி ஹதீஸ் புத்தகத்தில் வரும் முதலாவது ஹதீஸ். இதுவரை நீங்கள் படிக்காமலிருந்தால் இன்றே அதை புரட்டுங்கள். ஒருவன் தனது நாட்டை, குடும்பத்தை, செல்வத்தை விட்டு அடுத்த நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது அங்கே இருக்கும் அழகான பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என எண்ணி இருந்தால் அது நிறைவேறும். ஆனால் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது என்பது அந்த ஹதீஸின் அர்த்தம். பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் நீங்கள் வந்திருந்தால் அது நிறைவேறிவிட்டது, உம்ரா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமானதே! அதை இறைவன் ஒருவனே அறிவான். 

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை, நாம் போற்றும் நபிகளார் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது எந்த பிறந்தநாளுக்கும் கேக் வெட்டியதில்லை, இன்று என்னுடைய பிறந்தநாள், எனவே விழா எடுங்கள் என்றோ சொன்னதில்லை, அவர்களது காலத்தில் பாசத்திற்குரிய குழந்தைளுக்கும் அன்பிற்குரிய மனைவிகளுக்கும் நேசத்திற்குரிய தோழர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை, அதை அனுமதிக்கவுமில்லை. ஆனால் அறியாமையால் நீங்கள் கேக் வெட்ட முனைந்த போது தங்களுடன் இருந்த எவருமே தடுக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அந்த இடத்தில் அது தவறு என்பதை தங்களுக்கு அவர்கள் உணர்த்தி இருந்தால் தாங்களும் அதை உணர்ந்து அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பீர்கள். அதன் மூலமாக தமிழ் முஸ்லிம்களிடத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும். தாங்கள் செய்த அச்செயல் இன்று ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற கவலையே என்னுள் எழுகின்றது.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது இஸ்லாமிய கலாச்சாரமல்ல! அதுவும் சவுதி அரேபியாவில் அதை அனுமதித்த ஜித்தா நண்பர்கள் மிகப்பெறும் தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் தங்களை இஸ்லாமியனாக பார்க்கவில்லை. உடன் நின்று போட்டோ எடுக்கும் பிரபலமாகத் தான் பார்த்திருக்கின்றார்கள். இல்லையேல் உம்ரா செய்யும் போது மொட்டை அடிப்பது தான் சிறந்தது என்பதை சொல்லி தந்திருப்பார்கள். ஏனெனில் உம்ரா செய்துவிட்டு முடிகளை விரலளவு களைவதை இஸ்லாம் கற்றுத்தரவில்லை. மொட்டையடிப்பதை சிறந்ததாக கூறுகிறது. மொட்டையடித்தவர்களுக்காக நபிகள் பெருமானார் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை உங்களது வழிகாட்டிகள் உங்களுக்கு சொல்லித்தரவில்லை. அவர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்பதும் சந்தேகமே!

சரி! தங்களது பிறந்தநாளில் என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்தீர்கள். வயதை அளவிடும் ஒரு நாளே தவிர எந்த சிறப்பும் அதற்கு இல்லை. ஆண்டுக்கொருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானித்தீர்கள். வருடத்திற்கொருமுறை ஏன் அந்த நாளை கொண்டாட வேண்டும். மாதத்திற்கொரு முறை கொண்டாடலாமே? ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி கொண்டாடலாமே? ஏன்? கிழமையை கணக்கிட்டு வாரத்திற்கொருமுறை கூட கொண்டாடலாமே? நீங்கள் பிறந்தது திங்கள்கிழமை என்றால் இன்று அது வியாழக்கிழமை! பின் எவ்வாறு பிறந்தநாள் கொண்டாட முடியும். எனவே சிந்தியுங்கள்!

நம்மை பொறுத்தவரை வாழ்க்கை என்பது இந்த உலகத்துடன் முடிந்து விடுவதில்லை. மறுமை உலகம் என்ற மாபெரும் பேறு நமக்காக காத்திருக்கின்றது. அதில் நாம் வெற்றியடைய வேண்டுமாயின் அதற்கான தேர்வுக்கூடம் தான் இது. உங்களை புகழ்ந்து கொண்டும் உங்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களும் மறுமையில் உங்களுக்கு துணையாக வரமாட்டார்கள். மறுமை நாளிலே இந்த கூட்டமெல்லாம் உங்களை வரவேற்க வராது, உதவிகள் செய்யாது. நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள். மரணிக்குமுன் நீங்கள் தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் அவன் நாடினால் மன்னித்துவிடுவான்.

இறுதியாக, தமிழகத்திலோ அல்லது வடமாநிலங்களிலோ இந்த பிறந்தநாளை நீங்கள் கொண்டாட திட்டமிட்டிருந்தால் திரையுலகமும் ஆட்சியாளர்களும் திரண்டு ஊரே கோலாகலமாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட புனித பூமியான மக்காவிற்கு செல்வதை நீங்கள் சிறந்ததாக கருதியதிலிருந்து அந்த புகழாரத்தை விட மக்காவின் அமைதியை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது. எனவே தங்களை சுற்றியுள்ள கூட்டமே தங்களை முழுமையாக இஸ்லாத்தில் நுழையவிடாமல் தடுக்கின்றன என்பதை என்னால் உணர முடிகின்றது.

ரசிகர்கள் கூட்டத்தை கண்டு புளகாங்கிதம் அடையாமல் மறுமையை பற்றிய தேடுதலை அதிகப்படுத்துங்கள். அப்போது மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள். உங்களது தேடுதலில் இறைவனை பற்றிய அறிவை நீங்கள் பெற்றுவிட்டால் கல்லை, கபரை, மனிதனை வணங்க கூடாது என நீங்கள் முடிவெடுத்து விடுவீர்கள். ஆனால் அதை அறிவித்து விட்டால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும். இசை, பாடல்களின் மூலம் கிடைத்த புகழாரம் மற்றும் வருமானம் நின்று போகும். உங்களின் இசை, ஆடல், பாடல்களை ரசித்து உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவர். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். இந்த விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் இன்றே தங்களது தேடுதலை துவக்குங்கள். 

அன்பிற்குரிய ரஹ்மான்!

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதை போல இணைவைப்பிலிருந்து விலகி தவ்பா செய்தால் மீண்டும் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே எனது அவா. ஏனெனில் மறுமை நன்மைக்காகத் தான் நீங்கள் உம்ராவுக்கும் வந்தீர்கள். மதீனாவிலிருந்து ஜித்தா செல்ல பிளைட்டுக்கு நேரமாவதைக் கூட உணராமல் பிரார்த்தனையில் லியித்ததாகவும் அதனால் பிளைட்டை தவற விட்டுவிட்டு காரில் ஜித்தா செல்லும் நிலை எற்பட்டதாகவும் செய்தி அறிந்தேன். பிரார்த்தனையில் இத்தனை நிகழ்வுகள் நிகழும் போது மறுமையில் கேள்விக்கணக்கு நாளில் நமது நிலை என்னவாக இருக்கும்! அங்கு தனித்து விடப்படுவதை காட்டிலும் இவ்வுலகில் தனித்து விடப்படுவது துன்பம் தரும் விஷயமல்ல. மரணத்திற்கு பின் இருப்பதே நிலையான வாழ்க்கை என்பதை அறிந்து கொண்டு தீயவைகளை களைந்து இறைவனுக்கு பிடித்தவற்றை மட்டும் செய்யக்கூடியவனாக தங்களை இறைவன் மாற்றவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தவனாக முடிக்கின்றேன்.


ரியாதிலிருந்து அபு ஆஃபியா
 

உணர்வு' இதழில் வெளிவந்த கட்டுரை 


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

18 comments:

subra said...

மிகவும் சிறப்புக்குள்ள பதிவு ,ஆனால்
நண்பரே இது நடைமுறைக்கு ஒத்து வருமா
ஆனால் இப்படிதான் சொல்லபடிருகிறது என்றால்
எனக்கு கேள்வி ஒன்றும் இல்லை .

Issadeen Rilwan said...

அன்பின் சுப்ரா அவர்களுக்கு,

இதனை வரவேற்கிறேன்.
சாத்தியம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு எதுவுமே சாத்தியமற்றதாகத்தான் தெரியும்.
அதனால் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடுவோம் வாருங்கள்.

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மாஷா அல்லாஹ் அருமையான சிறப்பான பதிவு
போடடோக்கள் துள் கிளப்புறீங்க
தொடரட்டும் உங்கள் பனி

shifa said...

difficult to read. sentences are broken. p/e repost

Ravi said...

Nothing is clear. Who are you to dictate him? It is his life, it is his profession. You don't have any rights to interfere in others life. If he is also muslim, should he obey your words? If you think he is not muslim, remove him from your religion. Don't ask him to do what you say. Everyone have their own rights to do what they want. Your freedom ends in front of the opponent's nose. If you touch his nose, your nose will be broken.

Issadeen Rilwan said...

Dear Brother Mr. Ravi,
I hope you didn't read entire article, Please read once again and post your comment.

thank you for your time.

Issadeen Rilwan said...

Dear Shifa,

Thanks a lot for your info....,
I am working on to make it clear.

regards

Unknown said...

சகோதரரே
ஏ.ஆர் ரஹ்மானுக்கு இத்தனை பெரிய நீள மடல் utter waste
எப்போது அவர் இணை வைப்பதை இஷ்டத்துடன் ஏற்றுக் கொண்டு தர்ஹா வழிபாட்டை செய்கிறாரோ அப்போதெ அவர் இஸ்லாத்திலிருந்து விலகியவராகி விட்டார். இவரை இன்னமும் ஏன் ஒரு இஸ்லாமியராக பார்க்கிறீர்கள்.
உங்கள் கடிதம் வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்

Jafarullah Ismail said...

நல்லதை ஏவி தீயதை தடுப்பது ஒவ்வொறு முஸ்லிமின் கடமை. இன்ஷாஅல்லாஹ், சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அனாச்சாரங்களில் இருந்து வெளிவர பிரார்த்திப்போம்.

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,
சகோதரர் அமான் அவர்களுக்கு, ஒரு செய்தியை சொல்லும் போது வேஸ்ட் அல்லது வேஸ்டில்லை என்பதை தீர்மானிப்பதற்கு முன்னர் எம்மால் முடியுமான நல்லவைகளை ஏவுவது நம் அனைவர் மீது கட்டாயக் கடமையாகும்.

அதனை சகோதரர் மூ.ஜபருல்லாஹ் தெளிவாகச் சொல்லியுள்ளார், <>
இதே ஆக்கத்தை அவரது வலைப் பூவிலும் காணலாம் http://newstbm.blogspot.com/2011/01/blog-post_23.html


நன்றி

Anonymous said...

இந்த மடலை வரைந்தவர் எவராக இருப்பினும் அவருக்கும் அவரைப்போன்ற கருத்துக்களை கொண்டோருக்கும் ஒரு கோரிக்கை.
ஒருவர் தன் உடல் நிலை சரியில்லை என ஒரு மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்கிறார். இறையருளால் அவருக்கு உடல் நலம் சீரடைகிரது. அவர் அந்த மருத்துவர் மீது பெரும் அபிமானம் கொண்டவராக ஒவ்வொரு நல்ல நாட்களிலும் டாக்டருக்கு வாழ்த்து, அன்பளிப்பு என நடைமுறையை பின்பற்றுகிரார். இது மனித இயல்பு.
ஏ.ஆர். ரஹ்மானின் தந்தையார் உடல் நலம் குன்றியகாலலட்டத்தில், வறுமை, பசி என தத்தளித்து கொண்டிருந்த போது யாரோ சொன்னதால் ஏதோ ஒரு முஸ்லிம் பெரியாரின் அடக்கத்தலத்தில் தஞ்சம் புகுந்திருந்த போது உடல் நலம் இறயருளால் சீரானது உண்மை. பின்னர் அவர்களது குடும்பம் பொருளதார ரீதியாக சீரடைந்தது என அறிகிரோம்.
குறிப்பிட்ட அந்த பெரியாரின் அடக்கத்தலத்தில் தமக்கு நிகழ்ந்த உடல் நலத்திற்க்கு அவரும் அவரது குடும்பத்தினரும் நன்றி பாராட்டுகிறார்கள். அதுவும் முஸ்லிமாக மாறாத காலத்தில்தான்.
இது அவர்களது நம்பிக்கை.
இத்தகைய சூழலில் வளர்ந்த அதுவும் இசை, பாட்டு என நினைவு தெரிந்த நாள் முதல் தௌஹீதின் ஒரு கடுகளவு ஞானமும் இல்லாமல் வளர்ந்த அல்லாஹ் ரக்காஹ் ரஹ்மானிடம் தௌஹீதின் உச்சபட்ச நிலையை எதிர்ப்பார்ப்பது மடமை. (மன்னிக்கவும்)
இசையை வாழ்க்கைமுறையாக ஏற்று இருப்பினும் தமக்கு விருதோ பராட்டோ கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் "அல்ஹம்துலில்லாஹ்" என உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து கூறுகிராரே அதற்க்காகவாவது நாம் பாராட்ட வேண்டும்.
முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மேம்பட்ட எத்தனை பேர் ஏன் நீங்களே
முஸ்லிம் அல்லாதார்கள் நிறைந்த அவையில் இவ்வளவு உரக்க படைத்த ரப்பின் புகழ் பாடியதுண்டா?
இந்த ஒரு செயலே அல்லாஹ்வால் ஏற்றுகொள்ளப்பட்டதாக இருக்கலாமே?
நண்பரே!
ஷிர்க் எப்படி நீங்கள் வரையருப்பீர்கள்?
தர்காக்களுக்கு சென்று செய்வது ஷிர்க் தான்.
இதுவரை யாரேனும் நட்பு முறையிலோ வியாபாரரீதியிலோ, உறவு முறையிலோ, தொழில்(இசை) வழியிலோ அவரை சந்தித்து தௌஹீத்,ஷிர்க் பற்றி சிந்தனையை விதைத்து இருக்கிறார்களா?
எனக்கு தெரிந்து ஒரு முறை மர்ஹூம் அப்துல்லாஹ் அடியார் அவருக்கு இஸ்லாத்தின் தூய கருத்துக்களை எடுத்தியம்பிஉள்ளார். அய்.எஃப்f.டி சென்னையை சேர்ந்த சில ஊழியர்கள் திருக்குர்ஆனின் மொழி பெயர்ப்பு அவருக்கு கொண்டு சேர்பித்தூள்ளார்கள்.
ஏனையோர் பற்றி எனக்கு தெரியாது.
பலரும் அவருடன் தொடர்ப்பு கொண்டிருக்கலாம். தெரிந்தவர்கள் தகவல் பரிமாறிக்கொள்ளலாம்.
அறிவார்ந்த மக்களிடையே இஸ்லாமிய தஃவா என்பது மிகமிக கவனமாக கையாளவேண்டிய விஷயம்.
நமது
முஸ்லிம் சமுதாயமே பல்வேறு ஷிர்க்குகளில் மூழ்கி இருக்கிரோம்.
குலம்,இனம்,மொழி,பரம்பரை,சமூகம் அமைப்பு என ஏகப்பட்ட ஷிர்க்குகள் நம்மிடையே இடம்பெற்றுத்தான் உள்ளன. அதை நீக்கவும் நாம் முயற்ச்சிக்க வேண்டும்.

Zafarrulla Rahmani

Anonymous said...

Assalamu alaikuum.
Thaamadamagattaan vanthaalum nalla Kadidham.
Jazaakkallah.
A.R.Rahmanin nalvazhikkaagavum Dua seyyunga.

afarrulla Rahmani

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அபு ஆஃபியாவின் அற்புதமான கட்டுரை.

இஸ்லாத்தைப்பொறுத்தவரை ரஹ்மானின் இசைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் தவிர்ந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
சகோ ரஹமான் செய்யக்கூடிய தவறுகளை, நளினமான முறையில் அவர்களுக்கு எடுத்துரைத்திருப்பது கட்டுரையாளரின் தனிச்சிறப்பு.

ரஹ்மான் அவர்கள் இந்த கட்டுரையை படிப்பார்களேயானால் இன்ஷா அல்லாஹ், இறைவன் அவர்களுக்கு நேர்வழி கொடுக்க போதுமானவன்.

சகோ அமான் அவர்களே, சகோ ரஹ்மான் அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை அவர்களுக்கு அறியத்தந்து அவர்களை அதில் இருந்தும் தவிர்ந்து கொள்ள வழி வகை செய்வது எந்த வகையில் utter waste என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஸ்லிமாக இருப்பதால், இறைவன் நாடினால், இதுபோன்ற நல்லுபதேசங்கள் மூலமாக, அவர் தன்னுடைய தவறுகளில் இருந்து மீண்டுவர சந்தர்ப்பம் உள்ளது.

மேலும் நல்லுபதேசம் செய்வது உங்கள் மீதும் என் மீதும் மற்றும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதை இந்த திரு குர் ஆன் வசனம் மூலம் அறிந்து கொள்ளலாம்

மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும். (51:55)
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ

இறவைன் சகோ ரஹ்மான் அவர்களுக்கு நேரான வழியை தந்தருள்வானாக.

சகோ
அன்வர்தீன்.

Issadeen Rilwan said...

ஏதோ ஒரு காரணத்தால், சூல்நிலையால் மனித சமூகம் தீமையில் சிக்குண்டு தீமைகளை சம்பாதிக்கின்றார்கள், அதனை காண்கின்ற போது நாம் ஒவ்வொருவரும் நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வர வேண்டும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
அருமை! இந்த மடலை ரஹ்மானுக்கு அனுப்பி விட்டு உணர்வுக்கும் அனுப்பிய அபு ஆஃபியாவின் செயல் பாராட்ட வேண்டியதுதான், ஏனென்றால் அவர் வாசிக்கா விட்டாலும் சகோ ரவி மாதுரி ஆட்கள் அவரிடம் தொலை பேசியில் கூட தொடர்பு கொண்டு கேட்டால் நிச்சயமாக அவரை படிக்க தூண்டும், அது சமயம் அவர் அறியாத உண்மையான மார்கத்தை எல்லாம் வல்ல இறைவன் இன்ஷா அல்லாஹ் அவருக்கு அறிய வைப்பான். மேலும் இந்த மடலை தங்கள் தளத்தில் இட்டு ரஹ்மான் மாதுரி இன்னும் பல சகோதரர்கள் தெளிவு பெற ஏதுவாக அமைய வழி அமைத்துள்ளீர்கள். தொடர்ந்து செயல் பட வாழ்த்துகள்!

--
جزاكا لله خيرا

Mohammed Farooq

அன்ஸார் said...

//தமக்கு விருதோ பராட்டோ கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் "அல்ஹம்துலில்லாஹ்" என உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து கூறுகிராரே அதற்க்காகவாவது நாம் பாராட்ட வேண்டும்//

சகோ. ஜபருல்லாஹ்!
“நபியே! நீர் இணை வைத்தாலும் உனது அமல்கள் அழிந்து விடும்“ (சுமர் :65) என்று தன்னால் அனுப்பப் பட்ட நபியைப் பார்த்தே அல்லாஹ் கூறும் போது?,ஏ.ஆர் ரஹ்மான் என்ன அவரை விட எவனாக இருந்தாலும் அல்லாஹ்வைப் பொருத்த வரை இந்த மாதிரியான புகழை அவன் விரும்புவதுமில்லை. அது அவனுக்குத் தேவையுமில்லை.
இசையைப் பொருத்த வரை, அது இஸ்லாத்தில் தடுக்கப் பட்ட ஒன்று என்று தெரிந்த பின்னரும் சகே.ஜபருள்ளாஹ் ரஹ்மானி, இது விஷயத்தில் (இசை) அதிக தெளிவின்றி எழுதியுள்ளார் என்பதை அவருடைய இன்னும் சில வரிகள் தெளிவு படுத்துகிறது.

//"அல்ஹம்துலில்லாஹ்" என உள்ளத்தின் அடித்தளத்தில் இந்த ஒரு செயலே அல்லாஹ்வால் ஏற்றுகொள்ளப்பட்டதாக இருக்கலாமே?//
என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
ஆனால் “அது இருக்கவே மாட்டாது” என ஏற்கனவே (சுமர் :65) உள்ள வசனத்தில் அழகாக அல்லாஹ் கூறுகிறான். மேலும் “உள்ளத்தின் அடித்தளத்தில்“ அவர் அல் ஹம்து லில்லாஹ் சொன்னாரா? அல்லது வாயலவில் மாத்திரம் சொன்னாரா? என்பதை ஏகனாகிய இறைவன்தான் அறிவான்.
ஆனால் உள்ளத்திலுள்ளதை புகுந்து பார்த்தது போன்று சகோ. ஜபருல்லாஹ் ரஹ்மானி கூறுவது, பிரம்மிக்க வைக்கிறது. (உள்ளங்களில் உள்ளதை (உதிப்பதை )அவனே அறிபவன்“ (ஆலு இம்ரான் 119) என்ற இறை வசனம் உங்களுக்கு மறக்காமல் இருக்கட்டுமாக.
மேலும்
//முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மேம்பட்ட எத்தனை பேர் ஏன் நீங்களே முஸ்லிம் அல்லாதார்கள் நிறைந்த அவையில் இவ்வளவு உரக்க படைத்த ரப்பின் புகழ் பாடியதுண்டா?//

ஏன் பாடுவது?? நாங்கள் பாடாமல் இறைவனைப் போற்றுகிறோம். புகழுகிறோம்.இன்றும் “அவை”களை விட மாநாடுகளிலே லட்சோப லட்ச மக்கள் மத்தியில் பிரபல்யமிக்க இடங்களில் அல்லாஹ்வைப் போற்றுகிறார்கள்,போற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது. உதார.. (Dr.ஸாகிர் நாயக், பீ, சைனுலாப்தீன், பிலால் பிலிப்ஸ்.....) இணையங்களில் நீங்கள் பார்க்க வில்லையா? ஏ.ஆா் ரஹ்மான் மட்டும் புகழ்வது தெரியும் தங்களுக்கு, இவர்கள் புகழ்வது தெரியாமல் போனது ஏனோ???
மேலும்
//முஸ்லிம் சமுதாயமே பல்வேறு ஷிர்க்குகளில் மூழ்கி இருக்கிரோம். குலம்,இனம், மொழி, பரம்பரை,சமூகம் அமைப்பு என ஏகப்பட்ட ஷிர்க்குகள் நம்மிடையே இடம்பெற்றுத்தான் உள்ளன. அதை நீக்கவும் நாம் முயற்ச்சிக்க வேண்டும். //
ஷிர்க் என்பதர்க்கு தாங்கள் தரும் வியாக்கியானம் விசித்திரமாவுள்ளதே!(குலம்,இனம்,மொழி,பரம்பரை,சமூகம் அமைப்பு) என்கிறீர்கள் இதுதானா ஷிர்க்???? ஷிர்க் என்றால் என்னவென்றே தெரியாதவர் போல் நீங்களும் அதிலே இருக்கிறீர்களோ என அஞ்சத் தோணுகிறது. (அல்லாஹ் தங்களைப் பாதுகாப்பானாக).ஷிர்க் இரண்டு வகையைச் சார்ந்தது என யாவரும் அறிவர். 1-பெறிய இணைவைப்பு 2-மறைமுகமான (சிறிய) இணைவைப்பு. ஆனால் தாங்கள் உதாரணமாகக் கூறுபவைகள், இது இரண்டிக்கும் பொருத்தமற்ற உதாரணங்களாகும்.

தயவு செய்து இஸ்லாத்தைத் தவறாக விளங்கி இதர சமயத்தவர்களுக்கு தவறான முறையில் விளக்கமளிப்பதை விட்டும் நாம் அனைவரும் தவிர்ந்திருப்போமாக. யாருக்காகவும் எவறுக்காகவும் இந்த மார்க்கம் நெலியவோ வலையவோ செய்யாது. இதன் கொள்கைகள், சட்டங்கள், வாழ்க்கை நெறிகள் மகத்தானவை புனிதமானவை. காரணம் இந்த மார்க்கம் மகத்தான ஏகனாகிய ஒருவனான அல்லாஹ்வின் மார்க்கமாகும். விரும்பினால் ஏற்றக்கொள்! விரும்பா விட்டால் அது, அவரவர் துரதிஷ்டம்.
இஸ்லாத்தைப் பொருத்த வரை அது யாரையும் தேடிப் போகிற மார்க்கமல்ல. அதைத் தேடித்தான் அதிகமானோர் சாரசாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.(அல்லாஹ்வுக்கு நாம் தேவையற்றோர்.நாம்தான் அல்லஹ்விடம் தேவையுடையோர்).
என்பதை சகோ. ஜபருள்ளாஹ் ரஹ்மானி உட்பட, எவராக இருப்பினும் அவருக்கும் அவரைப்போன்ற கருத்துக்களை கொண்டோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
அன்ஸார் U.L(இலங்கை)

Saboor Adem said...

அஸ்ஸலாமு அலைக்கும்
"அறிவார்ந்த மக்களிடையே இஸ்லாமிய தஃவா என்பது மிகமிக கவனமாக கையாளவேண்டிய விஷயம்." ஆக்கபூர்வமான கருத்து. ந‌ன்றி ஜ‌ப‌றுல்ல‌ஹ்

ஒருவ‌ருடைய கருத்துக்களில்/நடைமுறையில் தவறோ? பிழையோ கண்டால் உடனே மார்க்க அறிஞர்களின் மேலான பார்வைக்கு வைத்து, அவர்களை மிகவும் இங்கிதமான முறையில் அநுகி, திருமறை ஹதீஸ்களின் அடிப்படையிலுள்ள ஆதாரங்களை விளக்கி, ஏற்றுக்கொள்ளச் செய்தல் - இதுவே உங்கள் பொறுப்பாகிறது! மாறாக அவர்களை விமர்ச்சிப்பது அல்ல.

வளர்ந்தவர்களை வளர்ந்து வருக்கின்றவர் விமர்ச்சிக்கக் கூடாது. தான் அறிந்த‌துதான் இஸ்லாம் என்ற‌வாத‌ம் ந‌ல்ல‌த‌ல்ல‌, தான் அறிந்த‌ இஸ்லாத்தைச் சொல்லுகின்றேன் என்று சொல்ல‌ வேண்டும். த‌வ்வா ப‌ணி இறைவ‌னுக்காக‌ ம‌ட்டும் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ப‌ணி. இதில் கொடுர‌மாக‌ ந‌ட‌ந்து கொள்வ‌த‌ற்கான‌ எந்த‌த் தேவையும் இல்லை.


தப்புகள், தவறுகள் அங்காங்கே பல‌ நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றது. அவைகளை களைவது எப்படி என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர... விமர்ச்சித்து நார் அடிப்பது நல்லதல்ல.

ஆகவே! ஒரு விடயம் தெளிவில்லாத விடத்து அதில் தர்க்கிக்க வேண்டாம்
நேர்வழியை அடைந்த சிலர் நேர்வழி பெற்றப் பிறகு, வீண் தர்க்கத்தை செய்தே தவிர வழிகெடுவதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள்.
-அபூ உமாமா (ரலி)
-திர்மிதீ , இப்னுமாஜா

அல்லாஹ்விடம் மனிதர்களில் அதிக கோபத்திற்குரியவர்கள் வீண் தர்க்கம் புரிவதில் கைதேர்ந்தவர்கள்தான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
-ஆயிஷா (ரலி)
-புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம்
பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.-அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்ற அல்லாஹ்வின் வாக்கையும் பேசினால் நல்லதையே பேசுங்கள் என்ற திருத்தூதரின் சொல்லையும் இங்கு அனைவருக்கும் நினைவுறுத்திக் கொள்கிறேன்.

ந‌ன்றி
ச‌பூர் ஆத‌ம்
அக்க‌ரைப்ப‌ற்று(இல‌ங்கை)

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
சகோதரர் ச‌பூர் ஆத‌ம் அவர்களுக்கு நன்றிகள்,
விதண்டா வாதங்கள் பற்றி சில செய்திகளை
ஞாபமூட்டி இருக்கின்றீர்கள்,
அத்துடன்
இந்த மடல் பற்றி என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் என்பதையும் சேர்த்துச்சொல்லுங்கள் நன்றாக இருக்கும்.
அன்புடன்